திராவிட இயக்க வரலாறு - நீண்ட நாள் ஆசை!

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravida-iyakka-varalaaru 
நீண்ட நாள் ஆசை!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி உயர்நிலைப் பள்ளியில், நான் மாணவன். உயர்திரு இராசலிங்கம் என்ப வர் எனக்கு ஆசிரியர். அவர் பகுத்தறிவு இயக்கத்தில் முழு ஈடுபாடு கொண்டவர்.

பெரியார், அண்ணா, ' பாவேந்தர் ஆகியோரிடம் அளவற்ற அன்பும், தளராத பற்றும் உள்ளவர். அவர்தம் பிள்ளை களுக்கு இராவணன், இந்திரசித், சூர்ப்பனகை என்று அரை நூற்றாண்டுக்கு முன்பே பெயர்வைத்தார் என்றால், சுயமரி யாதை இயக்கத்தில் எந்த அளவுக்கு அவர் தீவிரமாக இருந்தார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

அவர்தான் - எனக்கு முதன் முதலாக திராவிட வரலாற்றைப் பற்றி சொன்னவரும், புரிய வைத்தவரும், பின்பற்றச் செய்தவரும் ஆவார்.

அந்த நாட்களில் வந்தவாசியில் புதிய திரைப்படங்கள் வராது. அப்படி பார்க்க வேண்டும் என்றால், அருகில் உள்ள காஞ்சிபுரத்துக்குத் தான் செல்ல வேண்டும். நாங்கள் மாணவர்கள் நான்கைந்து பேராகச் சேர்ந்து கொண்டு, சைக்கிளில் காஞ்சிபுரம் செல்வோம். ஆசிரியர் இராசலிங்கத்தின் உறவினர் ஒருவர், அங்கே "திராவிட நாடு' பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தார். சைக்கிள்களை அந்த அலுவலகத்தில் விட்டுவிட்டுக் திரைப்படத்துக்குச் செல்வோம். மறுநாள் ஊர் திரும்புவோம். 'திராவிட நாடு' அலுவலகத்தில் பணியாற்றுபவர் களோடு பழகும் வாய்ப்பு, அப்போது எனக்குக் கிட்டியது.

ஒரு சமயம், வந்தவாசியில் சுயமரியாதைக் கூட்டம் நடத்த அண்ணாவை அழைக்க வேண்டும் என்று, ஆசிரியர் இராசலிங்கத்திடம் சிலர் வந்து கேட்டனர். அப்போது பக்கத்தில் நான் இருந்தேன். "அண்ணாத்துரை ஆபீஸ் ஆட்கள் அனைவரும் எனக்கு நன்றாகத் தெரியும்! அவர்கள் மூலம் பேசி, அவரை எப்படியும் அழைத்து வருகிறேன்!'' என்றேன். அவர்கள் ஒப்புக் கொண்டார்கள். நான் காஞ்சிபுரம் சென்றேன்.

கழுத்தில் தங்கச் சங்கிலி, விரல்களில் கல் பதித்த மோதிரங்கள், விலை உயர்ந்த கைக்கெடிகாரம், அதற்குப் பொன்னாலான பட்டை, சில்க் சட்டை, மெல்லிய மில் வேட்டி, பளிச்சென்ற முகம், அதிலே செல்வச் செழிப்பு - இவ்வளவு அலங்காரத்தோடு இருந்தவரின் எதிரில் போய், நான் உட்கார்ந்தேன். அவர் திரும்பிப் பார்த்தார். நான் வந்த வேலை யைச் சொன்னேன். அருகில் அமர்ந்திருந்தவரைக் காட்டி, "இவர்தான் அண்ணாத்துரை!'' என்றார். அப்படிச் சொன்னவர், டி.பி.எஸ். பொன்னப்பன் என்ற அண்ணாவின் நெருங்கிய நண்பர். நல்ல வசதியானவர். 'திராவிட நாடு' பத்திரிகையைத் தொடங்கி நடத்த, அண்ணாவுக்குப் பொருள் உதவி செய்தவர். அவரைத்தான் அந்நாள் வரை, அண்ணா என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

பொன்னப்பன் காட்டியவரைக் கண்சிமிட்டாமல் பார்த்தேன். இவரா அண்ணாத்துரை? திணறினேன்! வாயடைத்துப் போனேன்!

மேட்டித் துணியில் தைத்த 'வி' கழுத்து பனியன், சாயம் போன லுங்கி, வாராத தலை, கரை படிந்த பற்கள்.... எனக்குத் தலை சுற்றியது!

"என்ன சங்கதி?'' என்று கேட்டார். சொன்னேன். கூட்டத் திற்குத் தேதி கொடுத்தார்.

அப்போது தொடங்கிய அண்ணாவின் உறவு - அவர் மறைவுற்ற இறுதிக்காலம் வரை வளர்ந்தது - வளர்ந்தபடி இருந்தது.

அப்போது கவிதைகள் எழுதுவதில், நான் அதிக ஆர்வம் கொண்டிருந் தேன். நான் எழுதிய சில கவிதைகளை அண்ணாவிடம் கொடுத்தேன். படித்துப் பார்த்து, "நன்றாக இருக்கிறது!" என்றார்.

"கவிதை எழுதுவதைவிட, வசனமாகக் கதை கட்டுரைகள் எழுதி, பத்திரிகைகளுக்கு அனுப்பு! வெளியிடுவார்கள்! வரலாற்றில் வரும் நிகழ்ச்சிகளைப் படித்து, கட்டுரையாக எழுதி, எனக்கு அனுப்பு!" என்றார்.

அப்படியே, இங்கர்சால் என்ற விடுதலை வீரனைப் பற்றி எழுதி அனுப்பினேன். நான் வைத்திருந்த தலைப்பை மாற்றிவிட்டு, "பேசும் பிணம்" என்ற தலைப்பிட்டுத் திராவிட நாடு இதழில் வெளியிட்டார். அத்துடன் ஒரு கடிதமும் எழுதியிருந்தார்.

"தம்பி! கட்டுரை நன்றாக இருக்கிறது! எழுது! நிறைய எழுது! எனக்கு மட்டுமல்ல, மற்றவர்களுக்கும்!''                                                - அண்ணாதுரை

கடிதத்திலிருந்த வார்த்தைகளைப் பார்த்தேன்! படித்தேன்! பருகினேன்!

அப்பொழுதெல்லாம் அண்ணா சென்னைக்கு வந்தால், செம்பு காசுத்தெரு, கார்னர் எஸ்டேட் மாளிகை, 30-ஆம் எண் அறையில் தங்குவார். நாவலரும், அவர் இளவல் இரா.செழியனும், அந்த அறையை வாடகைக்கு எடுத்திருந்தனர். அடுத்து, புரசைவாக்கம் வேளாளர் தெருவில், பேராசிரியர் அன்பழகன் இல்லத்தில் தங்குவார். மற்றும் பஸ் முதலாளி தேவதாஸ் முதலியார் அலுவலகத்தில் தங்குவது தான் அதிகம். அந்த இடங்களுக்கு, நாள் தவறினாலும் - நான் செல்வது தவறாது! கழகத் தொண்டர்களும், நண்பர்களும் வந்துவிடுவார்கள். கூட்டம் கூடிவிடும். பல்வேறு பொருள்கள் பற்றிக் கலந்துரையாடல் நடக்கும். ஏராளமான செய்திகளையும், எண்ணற்ற பயனுள்ள கருத்துக் களையும் அவரிடமிருந்து கேட்டறிவோம்.

வந்தவாசிக்கு அடுத்த கண்டிநல்லூர் என்ற என் சொந்த கிராமத்தில், எனக்கும் சந்திராவுக்கும், அண்ணா தலைமையில் திருமணம் நடை பெற்றது. அந்த வட்டாரத்தில் நடக்கும் முதலாவது சுயமரியாதைத் திருமணம் அது. அந்தக் கிராமத்திலும், சுற்றியுள்ள ஊர்களிலும், அவ் வளவு பெரிய கட்டத்தைக் கண்டதில்லை. பேராசிரியர் க. அன்பழகன், மா.இளஞ்செழியன், கே.வி.டி. சீனிவாசன் முதலியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

எனக்குச் செல்வம், கண்மணி, இராசராசன் என்ற மூன்று மகன்கள்.

அப்போது அண்ணாவுக்குச் சொந்தக் கார் கிடையாது. வாடகைக்கு கார் ஏற்பாடு செய்து, அவரை அழைத்து வந்தோம். அப்போது சில நாட் களாக மழை பெய்து கொண்டிருந்தது. வழி நெடுக சேறும் சகதியுமாக இருந்தது. மழையில் அண்ணாவும் நனைந்து விட்டார். திருமணம் முடிந்ததும், காஞ்சிபுரம் சென்று, அவர் காய்ச்சலில் படுத்துவிட்டார்.

அதனால், திராவிட முன்னேற்றக் கழகத் தொடக்க விழா ஒரு வாரத்துக்குத் (18.9.1949) தள்ளி வைக்கப்பட்டது. என் திருமணத்தால், தி.மு.க. துவக்கமே தள்ளிவைக்கப்பட்டதை இன்றும் எனது நெருங்கிய தோழர்கள் பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள்!

அண்ணாவின் 'திராவிட நாடு', 'காஞ்சி' பத்திரிகைகளுக்கு ஏராள மான கதை கட்டுரைகளை எழுதியுள்ளேன். நான் எழுதிய பாண்டியன் திருமேனி' என்ற தொடர்கதை, காஞ்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வெளிவந்து நூலாகியுள்ளது.

பெரியாரை - அண்ணாவைப் போல நான் அடிக்கடி சந்தித்தது இல்லை. இடைவெளி அதிகமாக இருக்கும்.

பெரியார் சென்னையில் இருக்கும்போது - செம்புதாஸ் தெருவிலுள்ள பெரிய கட்டிடத்தின் முதல் மாடி, C.D.T. அரசு இல்லம், விடுதலை' அலுவலகம் ஆகிய இடங்களில் தங்குவார்.

ஒருநாள், C.D.T. அரசு வீட்டில் பெரியாரைப் பார்த்தேன். அவர் பேச்சுத் தெளிவாக இல்லை. காரணத்தை அவரே சொன்னார். "பற்கள் ஒன்று மாற்றி ஒன்று, பழுதாகித் தொல்லை கொடுத்துக் கொண் டிருந்தன. மருத்துவரின் யோசனைப்படி, எல்லா பற்களையும் பிடுங்கி விட்டேன்! விரைவில் புதுப்பல் வரிசை மாட்டிக் கொள்வேன்!" என்று அவர், தம் பொக்கை வாயைத் திறந்து காட்டிச் சிரித்தார். அந்தச் சிரிப்பு, இன்றும் என் மனக்கண்முன் ஒளி செய்கிறது.

அண்ணாவைப் பார்க்கப் போகும் போது, கையில் எதுவும் எடுத்துச் சென்றதில்லை. ஆனால் கையில் பழமோ, பிஸ்கட்டோ இல்லாமல், பெரியாரைப் பார்க்கச் சென்றதில்லை!

கலைஞரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும், நான் அவர் இல்லத்துக்குச் சென்று, மாலை அணிவித்து மகிழ்வது வழக்கம். இப்படிப் பல ஆண்டுகள் நடந்தது. ஆனால் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அது நடக்கவில்லை. என் உடல் நிலையே அதற்குக் காரணம். நடக்க முடியாமல், வெளியில் எங்கும் செல்வதில்லை. பிறந்தநாள் அன்று, என் வீட்டில் அவர் புகைப்படத்துக்கு மாலை போட்டு, வாழ்த்துச் சொல்வேன்.

மு.நமசிவாயம் என்பவர் நடத்திய கதம்ப மாளிகை' என்ற புத்தகப் பதிப்பகத்திலும், கலைவாணர் என்.எஸ்.கே. வீட்டிலும் கலைஞரைப் பார்த்துப் பேசி அளவளாவியிருக்கிறேன். பொங்கல் வரும்போது, 'முரசொலி' பொங்கல் மலருக்கு என் கதை வேண்டும் என்று, கலைஞரிடமிருந்து மடல் வரும். தவறாமல் கதை அனுப்பி வைப்பேன்.

நாவலரும் நானும், சென்னை இராயபுரத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த சுதந்திர நாடு' என்ற தினசரியில் துணை ஆசிரியர் களாகப் பணியாற்றி வந்தோம். அங்கே ஒரு வாரத்துக்குப் பகல் அடுத்த வாரத்துக்கு இரவு - இப்படி வேலை நேரம் இருந்தது. இரவு வேலையின் போது - வேலை முடிந்ததும் - இருவரும் மாடியில் படுத்துக் கொண்டு, தூக்கம் வரும் வரை, ஊர்க் கதைகளைப் பேசிக் கொண்டிருப்போம். இன்பமான அதுபோன்ற இரவுகள் - இனி எங்கே வரப் போகின்றன!

அவர் எழுதிய ஏடுகள் சிலவற்றை நான் பதிப்பித்துப் பாரி நிலையத்தின் மூலம் வெளியிட்டிருக்கிறேன்.

பேராசிரியர் அன்பழகன் அவர்கள், பச்சையப்பன் கல்லூரியில் எனக்குத் தமிழாசிரியர். அவர் நடத்திய புது வாழ்வு' பத்திரிகைக்கு நான் துணையாசிரியர். வீணை, பூக்குடலை என்ற என் இரண்டு நூல்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.

தி.மு.க. தொடங்கியபோது ஆரம்பிக்கப்பட்ட 'மாலை மணி' நாளேட்டின் முதல் ஆசிரியர் அறிஞர் அண்ணா - இரண்டாம் ஆசிரிய ராகக் கலைஞர் கருணாநிதி, மூன்றாம் ஆசிரியராக நான் பொறுப்பு ஏற்றேன்.

சுதந்திர நாடு, எங்கள் நாடு, நவ இந்தியா ஆகிய தினசரிகளில் துணை யாசிரியராகவும், சில வார, மாத ஏடுகளுக்கு இணையாசிரியராகவும் இருந்துள்ளேன்.

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.இராசேந்திரன் தயாரித்த 'தங்க ரத்தினம்', 'முத்து மண்டபம் திரைப்படங்களுக்குக் கதை வசனமும் மற்றும் சில படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளேன். பகுத்தறிவுக் கொள்கைகள் என் வசனத்தில் நிறைந்து இருக்கும். அண்ணாவும், மற்ற தலைவர் களும் அதைப் பாராட்டியுள்ளனர்.

நான் எழுதிய இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளி வந்துள்ளன. அவை வாசகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

தமிழக அரசின் மருத்துவத் துறையில் கெஜட் பதிவு அதிகாரியாக - பத்திரிகை ஆசிரியராக - பணியாற்றிவிட்டு, தற்போது ஓய்வு பெற்றுள்ளேன்.

பி.டி.ராசன், ஆதித்தனர், ஜி.டி. நாயுடு, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., நடிகமணி டி., வி.நாராயணசாமி, சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம், எஸ். வி. லிங்கம், ஏ. பொன்னம்பலனார், திருக்குறள் முனுசாமி, காளிமுத்து, சி. பி. சிற்றரசு, கே. ஏ. பி. விஸ்வ நாதன், பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி, என்.வி.நடராசன், டி.எம்.பார்த்தசாரதி, குத்தூசி, எஸ்.குருசாமி, கவிஞர் சுரதா, ராசாராம், 'டார்ப்பிடோ' ஏ.பி.சந்தானம், காஞ்சி மணி மொழியார், காஞ்சி கல்யாணசுந்தரம், 'போர்வாள்' மா.இளஞ்செழியன் - இப்படி முன்னணித் தலைவர்கள் பலரோடு எனக்கு நட்பும் தொடர்பும் இருந்து வந்ததையும் - வருவதையும் எண்ணி, நான் பெருமிதம் கொள்கிறேன். அவர்களில் சிலர் என்னைப் பெயரிட்டு அழைப்பார்கள்.

ஆங்காங்கே நடக்கும் கட்சிக் கூட்டங்கள், ஆண்டு விழாக்கள், மாநாடுகள், பட்டிமன்றங்கள், இலக்கியக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சி களில் நான் கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாகக் கலந்து கொண் டிருக்கிறேன். நாட்டில் நடப்பவைகளை ஊன்றி கவனித்து, உள்ளத்தில் தேக்கி வைத்துள்ளேன். நான் நேரிடையாகக் கண்டவைகளையும், கேட்டறிந்தவைகளையும், படித்து உணர்ந்தவைகளையும் - நூலாக்க வேண்டும் என்ற ஆசை, என் உள்ளத்தில் நீண்ட நெடுநாட்களாக ஊற்றுப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் பெரும்பகுதி இப்போது நிறைவேறிவிட்டது என்று சொல்லலாம்.

இந்நூலுக்காக நான் திரட்டிய குறிப்புகள் அதிகம்! மிக அதிகம்! பயன்படுத்தியதோ, அரைப் பங்குகூடத் தேராது. எழுதியது மிகவும் பெரியதாகி விட்டது என்று, கையெழுத்துப் பிரதியைச் சுருக்கியதில், கால் பாகத்துக்குமேல் உதிர்ந்து போயிற்று. மீதி நிற்பதுதான் இதோ, நூலாக உங்கள் கையில் இருக்கிறது!

வரலாறு என்பது, வரும் காலத் தலைமுறைக்கு வழிகட்டும் ஒளி விளக்கு. அந்த ஒளி விளக்கை - அறிஞர் அண்ணா, கலைஞர், நாவலர், பேராசிரியர், டி.எம்.பார்த்தசாரதி, முரசொலி மாறன், பி.எஸ். இளங்கோ போன்ற சான்றோர்கள் - சிறுசிறு கட்டுரைகளாகவும், சீரிய நூல்களாகவும் தந்துள்ளனர். இங்கே நானும் என் பேனாவை அவர்கள் வழியில் நாட்டியமாட விட்டிருக்கிறேன்!

என்னைப் பற்றி இவ்வளவு விவரங்களை, இங்கே சொல்லியிருப்ப தற்குக் காரணம் - இத்தகைய வரலாற்று நூலை எழுதுவதற்கு, நான் பொருத்தமானவனா, பொறுப்பானவனா- தகுதியானவனா, தெளிவானவனா- அனுபவம் பெற்றவனா - என்பதை உங்களை உணரச் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் - வெறும் பெருமைக்காக அல்ல!

சர்.பி.தியாகராயர் காலம் முதல், இன்றைய தமிழக முதல்வர் காலம் வரை - உருவாகி வந்துள்ள புதுமைகள் - புரட்சிக் கருத்துக்கள் - திரா விடம் கண்ட புதிய சரித்திரம் - ஆகியவற்றை, இன்றைய தலைமுறை மக்களும், அடுத்தடுத்த வாழையடி வாழையாக வரும் தலைமுறை யினரும் - இந்நூலைக் காண வேண்டும், படித்து அறிய வேண்டும், அறிந்து பயனைத் துய்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இந்த ஏட்டைத் தங்கள் திருக்கரங்களில் வைக்கிறேன்!

பல்வேறு அலுவல்கள் - கடமைகள் - பொறுப்புகளுக்கு இடையே பேராசிரியர் மாண்புமிகு அன்பழகன் அவர்கள் - என் திராவிட இயக்க நூலை முழுவதும் படித்துத் திருத்தங்கள் செய்து தந்துள்ளார். விட்டுப்போன செய்திகளையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

திருத்த வேண்டியவைகளைத் திருத்தியும், இணைக்க வேண்டியவை களை இணைத்தும், நூலைச் செம்மையாக்கியுள்ளேன்.

"அறிஞர் அண்ணாவிடம் பல ஆண்டுகள் பழகியவர், கலைஞரின் அறிவையும், நிருவாகத் திறமையையும் பாராட்டுபவர், நான் நடத்திய புது வாழ்வு' ஏட்டிலும் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறந்த முறையில் பணியாற்றியவர்!'' என்று என்னைப் புகழ்ந்து வாழ்த்துரை வழங்கியுள்ளார். என் பேராசிரியர் பெருந்தகைக்கு உவகைப் பெருக் கோடு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் நூல்கள் எழுத எனக்குத் தேவைப்படும் கிடைத்தற்கரிய ஏடுகளையும், சுவடிகளையும், துருவித்தேடி எடுத்த வந்து எனக்குத் தந்து உதவும், அண்ணா அறிவாலயத்திலுள்ள பேராசிரியர் ஆய்வகநூல் நிலையத்தின் நூலகர் உடன்பிறப்பு சி.கே.சுந்தரராசன் அவர்களுக்கும்,

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலத்துக்கு, என் நூல்களைச் சிறந்த முறையில் வெளியிட்டு என்னை ஊக்குவித்து வளர்த்த 'பாரி நிலையத்தின் அதிபர் பெருந்தகை அமரர் செல்லப்பன் அவர்களுக்கும் - அவர் மகனாரும், இந்நூலை வெளியிடுபவருமான செல்வர் அமர்ஜோதி அவர்களுக்கும்,

அரசியல் கட்சிகளின் நடப்புகளையும், தலைவர்களின் செயல்பாடு களையும் துல்லியமாகக் கணித்து - அரசியல் கட்டுரைகளைச் சுவையாக எழுதுபவரான 'முரசொலி' நாளேட்டின் அரசியல் விமர்சகர், நண்பர் கா.திருநாவுக்கரசு அவர்களுக்கும்,

சுவையான பல கதைகளைத் தந்துள்ள புதுமை எழுத்தாளர் தோழர் புதுமைப்பித்தன் அவர்களுக்கும்,

மற்றும் என் இனிய நண்பர்களுக்கும், என் இதயம் கனிந்த நன்றியும், வாழ்த்தும்!

 (கே. ஜி. இராதாமணாளன்)

Back to blog