திராவிட இயக்க வரலாறு - அணிந்துரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/dravida-iyakka-varalaaru
 
அணிந்துரை

எனது நீண்டகாலத் தோழரும், தந்தை பெரியாரிடத்தில் பெருமதிப்பும், பேரறிஞர் அண்ணாவிடத்தில் பெரும்பற்றும் கொண்டவருமான கே.ஜி.இராதா மணாளன் ஒரு சிறந்த எழுத்தாளர். முற்போக்குக் கொள்கை பரப்பும் புதினங்களும், சிறுகதைகளும் வரைதலில் புகழ் பெற்றவர். நான் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய அந்தக் காலம் முதலாக அவர் அங்கு மாணவராகப் பயின்றபோதே திராவிட இயக்கக் கொள்கைகளைப் பரப்பும் ஆர்வத்துடன் திராவிட மாணவர் கழகம் வளர்க்கப் பாடுபட்டவர்.

வந்தவாசிக்கு அடுத்த கண்டியநல்லூர் என்ற அவரது பிறந்த கிராமத்திற்கு, அவரது சுமரியாதைத் திருமணத்தை நடத்தி வைத்திட அறிஞர் அண்ணாவும், நானும் சென்ற நிகழ்ச்சி இன்னும் நினைவில் நிற்கிறது. அவர் நமது கழகப் பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். 'நவ இந்தியா' போன்ற ஏடுகளிலும், அரசு நடத்திய 'குடும்ப நலம்' போன்ற ஏடுகளிலும் பணியாற்றிப் பலரது பாராட்டையும் பெற்றவர். அறிஞர் அண்ணாவிடம் பல ஆண்டுகள் பழகியவர். கலைஞரின் அறிவையும், ஆற்றலையும், நிருவாகத் திறனையும் பாராட்டுபவர். நான் நடத்திய புது வாழ்வு' ஏட்டிலும் துணை ஆசிரியராகப் பொறுப்பேற்றுச் சிறந்த முறையில் பணியாற்றியவர்.

அவருடைய புத்தகங்கள் பலவும் படிப்பவர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டவையாகும்.

தமிழ் மக்கள் இன உணர்வும் பகுத்தறிவும் கொண்டாலன்றித் தமிழ் இனம் (திராவிட இனம்) தலைநிமிர வேறு வழியில்லை என்னும் முடிவான கருத்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையாலும், திராவிட இயக்க வரலாற்றை எழுத முற்பட்டார். அந்த இயக்கத்தைக் காத்திடவும், வளர்த்திடவும், எப்படிப்பட்ட இடர்ப்பாடுகளையும், தொல்லைகளையும் தலைவர்கள் தாங்கிக்கொள்ள நேரிட்டது என்பதையும், எத்தகைய தியாகம் செய்து அந்த இயக்கம் வளர்க்கப்பட்டது என்பதையும், இன்றைக்கு அரசியல் அறிவு பெறும் வாய்ப்புடைய இளைய சமுதாயம் அறிந்தாக வேண்டும் என்னும் நோக்கத்துடன் இந்த வரலாற்று ஏட்டை வரைந்துள்ளார்.

திராவிடர்கட்கு ஒரு கட்சி வேண்டும் என்ற எண்ணம் அரும்பிய காலம் முதல் - நம் மக்களுக்கு நியாயம் கிடைக்க முதன்முதல் குரல் எழுப்பிய நீதிக்கட்சி தோன்றிய நாள் முதல், விவரமாகவே அந்த வரலாற்றை வரைந்துள்ளார்.

பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதை, தீண்டாமை ஒழிப்பு, சமூக நீதியின் நியாயம், மூடநம்பிக்கை ஒழிப்பு, இந்தி ஆதிக்க எதிர்ப்பு தமிழ் மொழி உரிமை, தமிழகத்தின் முன்னேற்றத்துக்கான நிர்வாகம், மிசா காலத்தில் தாங்கிக் கொண்ட கொடுமைகள், கழகத்திற்கென்று உயிர் துறந்த தியாகிகள், திராவிட இயக்க வளர்ச்சியினால் ஏற்பட்ட திருப்பங்கள், அகில இந்திய அளவில் ஜனநாயகத்தை நாட்டவும், சமயச் சார்பின்மையைக் காக்கவும் கழகம் ஆற்றிய சீரிய பணிகள் முதலானவற்றை, நாட்டில் நடந்த நிகழ்ச்சிகளையே வரிசைப்படுத்தி வழங்கி யாரும் மறக்க முடியாத வரலாறாகப் படைத்துள்ளார்.

தந்தை பெரியாரால் ஊக்கமும், அறிஞர் அண்ணாவால் ஆக்கவும், கலைஞர் கருணாநிதியால் ஏற்றமும் பெற்றுள்ள தி.மு.கழகமே திராவிட இயக்கத்தின் திட்டமிடும் மூளையாக மட்டுமன்றி, தாங்கி நிற்கும் முதுகெலும்பாகவும் திகழ்வதைப் படிப்பவர் எவரும் உணருமாறு இந்நூல் விவரித்துள்ளது.

சித்திரத்தையும், சிற்பத்தையும் வண்ண ஓவியத்தையும் காண்பது போன்று, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முன் தொடங்கிய திராவிட இயக்கம் வளர்ந்த வகையையும் சந்தித்த திருப்புமுனைகளையும் ஒவ் வொன்றாக நம் மனக்கண்முன் கொண்டுவந்து, நடந்தது நடந்தவாறு காணச் செய்துள்ளார் ஆசிரியர். படிப்பவர் உள்ளம் ஒன்றிடச் செய்யும் சிறப்பு வாய்ந்த இந்த ஏடு, திராவிட இயக்கத்துக்கு மேலும் பல பல்லாயிரவரை ஈர்ப்பதுடன், அவர்களையெல்லாம் இயக்கத்தில் இணைந்து மக்கள் தொண்டில் ஈடுபடுத்தும் என்பது என் நம்பிக்கை. தமிழர்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஏதேனும் ஒரு நன்மையோ, மாற்றமோ விளைந்திருப்பதற்கான சுவடு பதிந்துள்ள திராவிட இயக்கத்தின் வரலாற்றை ஒவ்வொருவரும் தவறாது படித்திட விரும்புகிறேன்.

ஆசிரியர் கே.ஜி.இராதாமணாளன் அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். அவர் நலமுடன் திகழ்ந்து தொண்டாற்ற வாழ்த்து கிறேன்.

அன்பன்,

(க. அன்பழகன்)

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog