திராவிட இயக்க வரலாறு - பாகம் 1 - என்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
hhttps://periyarbooks.com/products/dravida-iyakka-varalaaru-part-1 
என்னுரை

கடந்த நூறு ஆண்டுகளில் தமிழக மக்கள் அதிகம் உச்சரித்த பெயர்கள் என்று நான்கைச் சொல்லலாம். பெரியார். அண்ணா, கலைஞர். எம்.ஜி.ஆர். தமிழகத்தின் அரசியல் வரலாற்றைத் தீர்மானித்த இந்த நான்கு ஆளுமைகளின் அரசியல் வாழ்க்கையை முழுமையாகப் பதிவு செய்யும் வகையில் தனித்தனி புத்தகங்கள் எழுதவேண்டும் என்பது என்னுடைய கனவு.

பெரியாரில் தொடங்கினேன். அள்ள அள்ளக் குறையாத அவருடைய எழுத்துகள் என்னை பிரமிக்க வைத்தன. பிறகு வாசிப்பை அண்ணாவுக்கும் கலைஞருக்கும் நீட்டித்தபோது என்னுடைய கனவு பரிணாம வளர்ச்சி பெற்றது. ஆம். தனித்தனி வாழ்க்கை வரலாறுகளைக் காட்டிலும் இந்த நான்கு சக்திகளும் நிலைகொண்டிருந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பதிவு செய்யும் ஆர்வம் முளைவிட்டது.

தேடலைத் தொடங்கிய போது திராவிட இயக்கம் தொடர்பாக நிறைய புத்தகங்கள் கிடைத்தன. குறிப்பாக, நாவலர் நெடுஞ்செழியன், முரசொலி மாறன் எழுதிய புத்தகங்கள். நீதிக்கட்சியைப் பற்றிய ஓரிரு ஆங்கிலப் புத்தகங்கள். அவற்றில் பெரும்பாலானவை அச்சில் இல்லை; தீவிரமான தேடலுக்குப் பிறகு இணையத்தில் கிடைத்தன.

தகவல் செறிவு நிறைந்த புத்தகங்களாக இருந்தாலும் அவற்றை எல்லாம் திராவிட இயக்க வரலாற்றின் தனித்தனி அத்தியாயங்களாக மட்டுமே பார்க்கமுடியும் என்பது புரிந்தது. திராவிட இயக்க சித்தாந்தத்தின் தோற்றம் தொடங்கி கட்சி அரசியல் வரையிலான முழுமையான பதிவின் அவசியத்தையும் உணர முடிந்தது. எழுதத் தொடங்கி விட்டேன்.

புத்தகம் இரண்டு பாகங்களைக் கொண்டது. நீதிக்கட்சி முதல் அண்ணா ஆட்சி வரை முதல் பாகம். அண்ணாவுக்குப் பிறகான அரசியல் வரலாறு இரண்டாவது பாகம்.

திராவிட இயக்கத்தின் தொடக்கப்புள்ளியாக நீதிக்கட்சியைக் குறிப்பிடுவது தான் பொதுவான வழக்கம். நான் சற்றே மாறுபடுகிறேன். திராவிட இயக்க வரலாறு என்பது தனிப்பட்ட கட்சியின் வரலாறு அல்ல; தென்னிந்தியாவில் உருவான மாபெரும் மக்கள் இயக்கத்தின் வரலாறு; ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தின் வரலாறு. அதன் ஆணிவேர் பிராமணர் - பிராமணர் அல்லாதார் பிரச்னையில் தொடங்குகிறது. ஆகவே, 1909ல் உருவான சென்னை பிராமணர் அல்லாதார் சங்கத்தில் இருந்து திராவிட இயக்க வரலாறைத் தொடங்கினேன்.

நீதிக்கட்சியின் உருவாக்கத்துக்கு முந்தைய பிராமணர் அல்லாதார் இயக்கங்கள் - அரசியல் சூழல், நீதிக்கட்சி உருவான வரலாறு, நீதிக்கட்சி அரசின் சாதனைகள் - சறுக்கல்கள், பெரியார் தொடங்கிய சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகத்தின் வளர்ச்சி, மொழிப்போராட்டம், திராவிட நாடு கோரிக்கை, திமுக தோன்றிய பின்னணி, அண்ணா ஆட்சியைப் பிடித்த வரலாறு என்று அறுபது ஆண்டுகால அரசியல் வரலாறை முதல் பாகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

கலைஞர் தலைமையில் திமுக செயல்பட்ட விதம், பெரியாரின் மறைவு, எம்.ஜி.ஆரின் விலகல், திமுகவின் எதிர்நீச்சல், மாநில சுயாட்சிக் கோரிக்கை, சமூகநீதிப் போராட்டம், ஈழப்பிரச்னை, ஜெயலலிதாவின் வருகை, மறுமலர்ச்சி திமுகவின் உருவாக்கம் என்று அண்ணாவுக்குப் பிறகான நாற்பது ஆண்டுகால அரசியல் வரலாறை இரண்டாவது பாகத்தில் பதிவு செய்திருக்கிறேன்.

திராவிட இயக்கம் குறித்த புரிதலுக்காகவும் ஆய்வுக்காகவும் ஒப்பீட்டு ஆய்வுக்காகவும் உதவிய புத்தகங்களின் பட்டியலை இரண்டாம் பாகத்தின் இறுதியில் இணைத்திருக்கிறேன். எனக்கு உதவிய புத்தகங்கள் என்பதற்காக மட்டும் அல்லாமல், திராவிட இயக்க வரலாற்றை மேலும் வாசிக்க விரும்பு வோருக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இணைத்திருக்கிறேன். சில புத்தகங்களைப் பற்றி மட்டும் இங்கே சொல்லவேண்டும்.

பெரியார், அண்ணா இருவருடைய நேரடிப் பதிவுகள் அனைத்துமே பிரதானமானவை. இருப்பினும், பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மையத்தில் எனக்குக் காணக்கிடைத்த நீதிக்கட்சி பொன்விழா மலர், முரசொலி மாறனின் திராவிட இயக்க வரலாறு, ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்?, கே.எஸ். ஆனந்தம் எழுதிய மலர்க, மாநில சுயாட்சி, கன்னிமரா நூலகத்தில் கிடைத்த நாவலர் நெடுஞ்செழியனின் சுயசரிதமான வாழ்வில் நான் கண்டதும் கேட்டதும், வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் தமிழக அரசியல் வரலாற்றின் ஒவ்வொரு அசைவையும் பதிவு செய்திருக்கும் கலைஞரின் நெஞ்சுக்கு நீதி (நான்கு பாகங்கள்) ஆகியவை குறிப்பிடத்தக்க முன்னோடி நூல்கள். பி. ராமமூர்த்தி எழுதிய விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும், அதற்கு மறுப்பு நூலாக கி. வீரமணி எழுதிய உண்மை வரலாறு இரண்டும் முக்கியமானவை.

P. ராஜாராமன் எழுதிய The Justice Party - A Historical Perspective (1916 -- 1937) மற்றும் Eugene F. Irschick எழுதிய Politics and Social Conflict in South India: The Non - Brahman Movement and Tamil Separatism (1916 - 1929) என்ற இரண்டு முக்கியப் புத்தகங்களும் இணையத்தில் கிடைத்தன. புத்தகத்தின் எழுத்துப்பணி முடியும் தருணத்தில் வெளியானக. திருநாவுக்கர எழுதிய நீதிக்கட்சி வரலாறு (இரண்டு பாகங்கள்) ஒப்பீட்டு ஆய்வுக்கு மிகவும் உதவியாக இருந்தன.

வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும்போது, மூலக்கருத்து மாறிவிடாம லிருக்க, தொடர்புடைய தலைவர்கள் மேற்கோள்களை நன்றியுடன் பயன்படுத்தியுள்ளேன். தலைவர்களுடைய சொல்லாடல்களைப் படிக்கும் போது வாசகர்களுக்கு செய்தியின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்று நினைக்கிறேன்.

புத்தகம் எழுதத் தொடங்கியது முதல் திராவிட இயக்கம் தொடர்பாக என்னைப் பாதித்த செய்திகளை - சம்பவங்களைச் சொல்லும்போது என்னுடைய ஆர்வத்துக்கு அணைபோடாமல் பொறுமையுடன் செவிசாய்த்து, என்னை ஊக்கப்படுத்திய என்னுடைய தந்தை திரு. ராமசாமி மற்றும் தாயார் திருமதி ராணி இருவருக்கும் சொல்லித் தீராத நன்றிகள். புத்தகத்தை எழுதி முடிக்கத் தொடர்ச்சியாக ஊக்கமருந்து செலுத்திய என்னுடைய முதன்மை ஆசிரியர் பா. ராகவனுக்கு நன்றிகள் பல.

நீண்ட தேடலையும் கவனம் பிசகாத கடும் உழைப்பையும் கோரிய இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்துக்கு எனக்கு உதவியாக இருந்தவர்கள் பலர். பேராசிரியர் ஆய்வு நூலகத்தின் நூலகர் சுந்தரராசன், பெரியார் பகுத்தறிவு நூலகத்தின் நூலகர் கோவிந்தன், நூலகப் பணியாளர் சமநீதி, கன்னிமரா நூலகப் பணியாளர்கள், ரோஜா முத்தையா நூலகத்தினர், ராயப்பேட்டை ஈஸ்வரி லெண்டிங் லைப்ரரி, இதழ் சேகரிப்பாளர் எஸ். வி. ஜெயபாபு ஆகியோருக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றிகள்.

திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பதிவு செய்வதன்மூலம் தமிழகத்தின் நூறாண்டுகால அரசியல் வரலாற்றைப் பதிவு செய்யும் என்னுடைய நோக்கம் எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பதை வாசகர்களாகிய நீங்கள்தான் சொல்லவேண்டும். இனி இது உங்கள் சொத்து.

அன்புடன்

ஆர். முத்துக்குமார்

15 டிசம்ப ர் 2010

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog