மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள் - மாந்தர் கையில் பூவுலகு - பதிப்புரை

தலைப்பு

மார்க்சியம் இன்றும் என்றும் - 3 நூல்கள்

எழுத்தாளர் பில் கஸ்பர்|சி.ஆரோக்கியசாமி|டேவிட் ஸ்மித்|க.சுப்ரமணியன்|பரிதி|ச.பிரபுதமிழன்
பதிப்பாளர்

விடியல்

பக்கங்கள் 1 + 2 + 3 = 980
பதிப்பு முதற் பதிப்பு - 2018
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.600/-

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://www.periyarbooks.in/marxsiyam-indrum-endrum-3-books.html

மாந்தர் கையில் பூவுலகு - பதிப்புரை

"பட்டினிப்புரட்சி" நூலுக்குக் கிடைத்த ‘எதிர்பாராத வரவேற்பும், மார்க்சியம் குறித்த கோட்பாட்டு நூல்களைத் தொடக்க நிலை வாசகர்களுக்குத் தரவேண்டியது குறித்து ஆசிரியருடன் நடந்த உரையாடலுந் தான் “மாந்தர் கையில் பூவுலகு” நூல் உருவானதற்குக் காரணங்கள்.

மகிழ்ச்சி உள்ளிட்ட பல மனித உணர்வுகளை, ஹார்மோன்களை மூளையில் உருவாக்க இணையத்தையும் கைப்பேசியையும் நம் கையில் தந்துள்ள முதலாண்மை, மனிதர்களின் பல உணர்வுகளை அக்கருவிகளின் வழியே நிறைவுறச் செய்கிறது. இப்போது நிலவும் சமூக நிலை குறித்த அதிருப்தி, மாற்றம் விழையும் வேட்கை, நம்பிக்கைகளை வலுப்படுத்தும் அல்லது கேள்விக்குள்ளாக்கும் தரவுகளைத் தேடும் பண்பு போன்றவை முதற்கொண்டு, மனிதனின் அகம் சார்ந்த ஆசைகள், பிறழ்ச்சிகள் மற்றும் மதிப்பற்ற பண்பு நலன்கள் வரை அனைத்தையும் கற்றுக்கொள்வதும், பரப்புவதும் பெரும்பாலும் செயல்வடிவம் இன்றியே இணையம் வழி நடந்தேறி விடுகின்றன. இவ்வஞ்சனையின் பலிகடாக்களாக மக்கள் மாறிவரும் சூழலில் மார்க்சியக் கல்விக்கு அவர்களைத் தயாரிப்பது என்பது ஒரு சவாலாகவே உள்ளது.

குரங்கு தன் குட்டிக்குப் பேன் பூச்சி பார்ப்பது போல், தமது இரண்டு கைகளையும் கைப்பேசிக்குத் தந்து விட்ட மனிதர்களிடம் மார்க்சைத் தவழவிட வைப்பதற்கு முதலில் எதைச் சொல்லி அவர்களுடைய கவனத்தை ஈர்க்க முடியும்? தங்களது உழைப்பை, வாழ்க்கையைத் திருடும் முதலாளியப் பொருளாதார சமூக அமைப்பையா? அதைக் காப்பாற்றும் அரசு ஒடுக்கு முறைகளையா? ஆனால் சூழலியல் சிக்கல்களை முதலாளியப் பொருள் உருவாக்கம் மற்றும் பரிமாற்ற முறையுடன் இணைத்து, நிலவும் நெருக்கடிகளின் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் போது, அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு இணையாகவும் சில இடங்களில் கூடுதலாகவும் சூழல் நெருக்கடிகள் பயணிப்பதைக் காண முடிகிறது.

'குரங்கு கையில் பூமாலை' எனும் தலைப்பே உண்மையில் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணும் அளவிற்கு இப் பூவுலகு நாசப்படுத்தப்பட்டுள்ளது. (விலங்குகளில் எதையும் உயர்வு, தாழ்வு நவிற்சி செய்வதில் எமக்கும் உடன்பாடு இல்லை.) பிய்த்து எறியப்பட்டுவிட்ட பூக்களைக் கோர்க்க முடியாதது போலவே, இப்பூமியை இனிப் பழுதுபார்க்கத் தான் முடியும், முழுமையாகச் சரி செய்யமுடியாது என்கின்ற உண்மையை இன்றைய கால கட்டத்தில் அறுதியிட்டுக் கூற முடியும். ரோசா லக்சம்பர்க் கூறியது போல், “நம்முன் உள்ளவை இரண்டு வாய்ப்புகள்தாம்: ஒன்று சோசலிச சமூகத்தைத் தேர்ந்தெடுத்தல் அல்லது பண்பாட்டு வளர்ச்சியற்ற காட்டுமிராண்டிச் சமூகத்தைத் தேர்ந்தெடுத்தல்." இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றுதான்.

'பட்டினிப் புரட்சி' நூலிலுள்ள கருத்துகளின் பிழிவும், முதலாளியச் சமூக உறவுகள் சூழலியச் சீரழிவைக் கொண்டு வந்ததன் பின்னணியையும் கூடுதலாக உள்ளடக்கியுள்ள இந்நூல் "மார்க்சியம்” அனைத்து வகுப்பு மக்களுக்கும் ஏன் தேவை என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.

ஒட்டுமொத்த உயிர்ச் சூழலும் இயற்கையாகக் காலங்காலமாகத் தகவமைத்துக் கொண்டு வளர்த்த நுட்பங்களையெல்லாம் மிகக் குறுகிய காலத்தில் சீரழித்துவிட்டது முதலாளியத் தனிச் சொத்தின் பேராசை. மனிதகுலம் தனது இடைவிடாத போராட்டங்களின் மூலம் ஒருவேளை சமூக அரசமைப்பு முறையை மாற்றிக் கொண்டாலும் இவர்களின் கொடூர இலாப வெறி நிலப்பரப்பையும், கடற்பரப்பையும் அதுவரை விட்டு வைக்குமா என்பது கேள்விக்குறியே!

வளரும் தலைமுறையினரின் நல்வாழ்வும், இயல்பாய் உயிர் வாழும் காலமும் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இனித் தோன்றும் மனிதர்கள் உடல் நலம் மட்டுமின்றி உணவுப் பாதுகாப்பும் அற்ற வாழ்க்கையை எதிர்கொள்வர். இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். முதலாளியச் சமூக அமைப்பைக் கொண்டாடும் பிழைப்புவாத ஊடகங்கள் சூழல் மாசுபாட்டைப் பற்றிய உண்மைகளைக் கண்டும் காணாதவையாகவே உள்ளன. பணம் படைத்த ஒற்றை இலக்க மந்தைக் கூட்டமோ, வேற்று கிரகத்தையும் தங்களது கழிவுகள் சென்றடையாத புவிப் பரப்பையும் தேடி ஓடுகின்றது.

பொருள் உருவாக்கம், பகிர்வு, பயன்பாடு ஆகியவற்றின் நடப்புக் கயமைகளைப் பட்டியலிடும் ஆசிரியர், பஞ்சம், பட்டினி, வறுமை, வாழ்வாதாரம் பறிபோதல், சூழல் சீர்கேடு போன்றவை இக்கேடுகெட்ட முதலாளிய சமூக அமைப்பின் பிரிக்க முடியாத சிக்கல்கள் என்பதை உறுதியாக நிறுவுகிறார். சமூகத்தின் பல்வேறு தளங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளுக்கும். புவிச் சூழல் சீர்கேட்டுக்கும் காரணமான இச்சமூக அமைப்பைப் புரிந்து கொண்டு போராட வேண்டியதன் தேவையைத் தரவுகளுடன் விளக்குகிறார். ஒப்புரவு பற்றிய கட்டுரைகளில் சமூக மாற்றத்தின் தேவையை உள்ளடக்கியதாக, நடைமுறையில் உடனடியாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய கருத்துகளை அழுத்தமுடன் வைத்திருக்கிறார். உழுது வாழ்தலைப் பல்லாயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடும் பண்பாட்டை உடைய தமிழர்கள் தங்களைப் பாதுகாக்க, உழவை, நிலத்தை, பல்லுயிர்ச் சூழலைக் காப்பாற்றப் பயன்படும் கருத்தாயுதங்களில் ஒன்றாக இந்நூல் விளங்கும்.

சூழலியல் போராட்டங்களை ஒடுக்கும் அரசுகள், குறிப்பாகத் தமிழகத்தில் தற்பொழுது போராட்டக்காரர்களுக்குத் தரும் பட்டம் ‘தேச விரோதிகள்' என்பதே. நூலின் தரவுகளைப் படித்துப் பார்த்து இந்தப் பட்டத்திற்கு யார் தகுதியானவர்கள் என்பதை முடிவு செய்யலாம். ஆளும் வர்க்கமாக உள்ள பெருமுதலாளிகள், அரசியல்வாதிகள் மற்றும் இவர்களின் தரகர்களாக இருக்கும் அதிகாரிகள், ஆட்சியாளர்கள், நீதித்துறையினர், காவல்துறையினர், ஊடகத் துறையினர் முதலியோர் தங்களினதும் தங்கள் வாரிசுகளினதும் எதிர்காலம் வெறும் (அசையும் மற்றும் அசையாச்) சொத்துகளில் மட்டுமில்லை என்பதையும், அவர்கள் உண்ணும் உணவு, குடிக்கும் நீர், சுவாசிக்கும் காற்று போன்ற சொத்துகளை இந்தத் “தேச விரோதிகள்" தான் காப்பாற்ற முடியும் என்பதையும் உணர மறுக்கும் அறிவிலிகளாக உள்ளனர். இந்த மடமையை அவர்களுக்குப் புரிய வைக்கவேண்டியது அவர்களது வளரும் தலைமுறை வாரிசுகளின் கடமைகளில் ஒன்று.

சூழல் சீர்கேடுகளை எதிர்த்து மனிதர்கள் போராடும் போது அவர்களுடன் இணைந்து பிற உயிரினங்கள் பல வடிவங்களில் போராடி உயிரிழக்கின்றன. காட்டிலிருந்து ஊருக்குள் வரும் உயிரினங்கள், மலைகளிலிருந்து சமவெளிக்கு வரும் உயிரினங்கள், ஆழ் கடலிலிருந்து கரைக்கு வரும் உயிரினங்கள் தங்கள் போராட்டங்களை அறவழியில் நடத்திச் சாகின்றன. அன்றாடம் நூற்றுக்கணக்கான உயிரினங்கள் இனப் படுகொலை போல் முற்றிலும் அழித்தொழிக்கப்படுகின்றன. ஆண் என்றும் பெண் என்றும் வரையறுக்க முடியாத உயிரினங்கள் பெருகுகின்றன. மறு உருவாக்கத்திற்கு வாய்ப்பில்லாத உயிரினங்கள் என்னவாகும்? மலடுதட்டும் தேனிக்கள் என்னவகை அழிவைத் தரக்கூடும்? இப்படி ஆயிரக்கணக்கான கேள்விகள்.... விடை ஒன்றே ஒன்றுதான்: சோசலிசமா, காட்டுமிராண்டித்தனமா என்பதில் தான் அந்த விடை உள்ளது.

புவிக்கோளம் மனிதனுக்கு மட்டுமே சொந்தம் என்றோ, மனிதன் மட்டுமே தனித்து வாழ்ந்து விட முடியும் என்றே கருதுவது எவ்வளவு மடமையானது என்பதை இயற்கைச் சீர்கேடுகளும், சீற்றங்களும் நமக்கு அன்றாடம் உணர்த்துகின்றன. 'கடவுளின் தேசமே' இயற்கையால் காவு கொள்ளப்பட்டு விட்டது; (இல்லாத) கடவுளை விட இயற்கை வலிமையானது. 'தேசம்' செயற்கையானது, மாற்றத்திற்குட்பட்டது; இயற்கை பழமையானது; மாற்றினால் நாம் அழிந்து விடுவோம். ஆளும் வகுப்புக் கண்ணோட்டத்தில் தேச விரோதியாய் இருப்பது என்பதும் இயற்கையின் தோழனாய் இருப்பது என்பதும் ஒன்று தான்.

சூழலுக்கு எதிரான ஆளும் வகுப்பினர் தங்களது தேச பக்தியைக் கொண்டுபோய் மழையில், வெய்யிலில், காற்றில், பனியில், மலையில், கடலில் நிறுத்தி வைக்கட்டும். இயற்கை அவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும். அது அவர்களின் தேச பக்தியைக் கரைக்கும், சுடும், தூர எறியும், உறையவைக்கும், மண்ணில் புதைக்கும், மீள முடியா ஆழத்துக்குக் கொண்டு செல்லும். இயற்கை என்ன செய்யுமோ அதையே இயற்கைச் சூழலின் தோழர்கள் ஆளும் வகுப்பிற்குச் செய்வார்கள்.

இயற்கைச் சூழலின் அழிவைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் மறைந்த சூழலியல் தியாகிகள் மற்றும் இடையறாது பணியாற்றும் போராளிகள் அனைவருக்கும் இந்நூலின் மூலம் விடியலின் வணக்கங்களும் நினைவும் பகிரப்படுகின்றன.

சூழல் மாறுபாடுகள் சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்களைச் சென்றடைந்து கொண்டிருக்கும் காலத்தில் இந்நூலைக் கருத்தாயுதமாக்கிய பரிதி அவர்களுக்கு விடியலின் நன்றி. மக்கள் பதிப்பாக இந்நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் விடியலின் நெஞ்சார்ந்த நன்றி.