பேரறிஞர் அண்ணா நடத்திய அறப்போர் - முன்னுரை

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/perarignar-anna-nadathiya-arappor
 
முன்னுரை

பேரறிஞர்களின் கட்டுரைகள் கருத்துக் களஞ்சியமாக விளங்கிச் சமுதாயத்துக்கு மிக்க பயன் தருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பேரறிஞர்களில் அண்ணா அவர்கள் சிறப்பான இடத்தைப் பெற்றுத் திகழ்கிறார். இந்திமொழி தமிழ்நாட்டுப்பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப் பட்ட போது பேரறிஞர் அண்ணா அதனை எதிர்த்தார். அன்றைய காலச் சூழலை இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் நன்கு விளக்குவன.

தமிழக வரலாற்றின் ஒரு பகுதியை அறிவதற்கு இக்கட்டுரைகள் உதவுகின்றன. இதுவரை நூல் வடிவம் பெறாத இக்கட்டுரைகளைப் பெருமுயற்சி மேற்கொண்டு நூலாக்கியுள்ளோம். பேரறிஞர் அண்ணாவின் கட்டுரைகளோடு தொடர்புடைய செய்திகளும் இத்தொகுப்பில் சேர்க்கப் பெற்றுள்ளன. இந்தி எதிர்ப்புப் போர் அறப்போராக அமையுமாறு பேரறிஞர் அண்ணா நடத்திக்காட்டிய பாங்கினை நாம் அறியலாம்.

தமிழ்மொழியைக் காப்பதற்கு வீரத்தோடு திரண்ட மறவர்களைப் பற்றிய செய்திகள்; அவர்கள் அடக்குமுறைக்கு ஆளாகிப் பட்ட துயரங்கள், சிறைவாசம், தடியடி, ஊருக்கு வெளியே நெடுந்தூரம் காட்டு பகுதிகளில் கொண்டுபோய் விடுகின்ற கொடுமைகள், போராட்டத்தில் பங்குபெற்ற கருவுற்ற மகளிரையும் துன்புறுத்தும் ஆணவம் முதலிய பல செய்திகளை இந்நூல் அறிவிக்கிறது.

கட்டுரைகளைத் தொகுப்பதில் என் தந்தையார், முத்தமிழ்க் கவிஞர் டாக்டர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் அவர்கள் எனக்கு உதவினார். அண்ணா அறிவாலயத்தில் நூலகராக விளங்கும் மதிப்பிற்குரிய திரு. சி. கே. சுந்தரராசன் அவர்கள் எனக்கு ஊக்கம் வழங்கினார். அச்சுப்படிகளைத் திருத்திய நண்பர் திரு. சேகர் குறிப்பிடத்தக்கவர். என் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளித்துவரும் பெரியோர் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. பேரறிஞர் அண்ணாவின் நூல்களை நாட்டுடைமை ஆக்கிய தமிழக அரசினைப் பாராட்டுவோம்.

அன்பார்ந்த.

மோ. பாட்டழகன்.

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog