பெரியார் காவியம் - அணிந்துரை -4

பெரியார் காவியம் - அணிந்துரை -4

தலைப்பு

பெரியார் காவியம்

எழுத்தாளர் இரா.மணியன்
பதிப்பாளர் சீதை பதிப்பகம்
பக்கங்கள் 464
பதிப்பு முதற் பதிப்பு - 2009
அட்டை தடிமன் அட்டை
விலை Rs.220/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/periyar-kaaviyam-1054.html

அணிந்துரை - 4

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் அண்ணா கோவை பாடிய பெருமைக்குரிய பேராசிரியர் முனைவர் இரா. மணியன் அவர்கள் இப்பொழுது தந்தை பெரியார் அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பெரியார் காவியம் என்னும் பெயருடைய இக் காப்பியத்தை எழுதியிருப்பது கற்றறிந்த சான்றோர்களுக்குக் கழிபேருவகை நல்குவதாகும். இராமனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு கம்பர் எழுதிய கம்பராமாயணத்தைத் தீயிட்டுப் பார்க்க வேண்டும் என்று திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் அனல்கக்கும் பிரச்சாரத்தை நடத்திவந்த அந்தக் காலகட்டத்தில் இராமகாதை போல ஒரு காப்பியத்தை உங்கள் இயக்கத்தவரால் உருவாக்க முடியுமா? என்று ஒரு வினா எழுப்பப்பட்டது. அந்த வினாவிற்கு விடை கூறுவார் போலப் புலவர் குழந்தை அவர்கள் இராவணனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இராவண காவியம் எழுதினார். அதே போன்று இப்பொழுது தந்தை பெரியாரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு பேராசிரியர் மணியன் அவர்கள் பெரியார் காவியத்தைப் படைத்துள்ளார்.

கவிஞர் கருணானந்தம் அவர்கள் எழுதிய பெரியார் வரலாறு என்னும் நூலை அடிப்படையாகக் கொண்டே இந்நூல் எழுதப் பெற்றுள்ளது. இதிலும் ஒரு நல்ல தொடர்பு உள்ளது. கவிஞர் கருணானந்தம் அவர்களின் பேத்தி இளவரசி I.R.S அவர்களின் கணவர் ம.மதிவாணன் I.R.S அவர்களின் தந்தையே பேராசிரியர் மணியன் ஆவார். ஆகவே, திராவிடர் இயக்கம் என்ற வளமார்ந்த மண்ணில் வளர்ந்த கவிஞர் கருணானந்தம் அவர்களும் கவிஞர் இரா. மணியன் அவர்களும் பெரியார் வரலாற்றை முறையே உரைநடையிலும், கவிதையிலும் உருவாக்கியிருப்பது மிகவும் பாராட்டிற்குரிய தாகும்.

கம்பராமாயணத்தில் பாலகாண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்னும் ஆறு காண்டங்கள் உள்ளன. ஒட்டக்கூத்தர் எழுதியதாகச் சொல்லப்பெறும் உத்தரகாண்டத்தையும் கணக்கில் சேர்த்தால் காப்பியத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன என்று கொள்ளலாம். இராவண காவியத்தில் தமிழகக் காண்டம், இலங்கைக் காண்டம், விந்தக் காண்டம், பழிபுரி காண்டம், போர்க்காண்டம் என்னும் ஐந்து காண்டங்களும் 3100 பாடல்களும் உள்ளன. பெரியார் காவியத்தில் ஈரோட்டுக் காண்டம், பேராயக் காண்டம், சுயமரியாதைக் காண்டம் திராவிடர் காண்டம், காமராசர் காண்டம், அண்ணா காண்டம், கலைஞர் காண்டம் என்னும் ஏழு காண்டங்களும், 1000 பாடல்களும் உள்ளன. பெரியார் காவியத்தில் இடம் பெற்றுள்ள 1000 பாடல்களும் காவிரியாற்றில் ஆடிமாதத்தில் ஓடி வருகின்ற புதுப்புனல் வெள்ளம் போன்று தங்கு தடையற்ற தமிழ் நடையில் பாடப் பெற்றுள்ளன. செய்யுட்களில் அவற்றின் ஓசை செம்மையாக அமைவதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாள்வர். இரு சொற்களை இணைத்து ஒருசீர் ஆக்குவதும். ஒரு சொல்லைப் பிரித்து இருசீர் ஆக்குவதும் வகையுளி என்று கூறப்பெறும். ஒரு நூலில் வகையுளி மிகுதியாக அமைந்த பாடல்கள் இடம் பெற்றால் சிற்றறிவி னோர்க்குப் பாடல்களின் பொருளை உணர்ந்து கொள்வதில் இடர்ப்பாடு ஏற்படும். பேராசிரியர் மணியன் அவர்கள் பெரும்பாலும் வகையுளியைத் தவிர்த்து இக்காவியத்தைப் படைத்திருப்பது பெரிதும் பாராட்டத் தக்கதாகும்.

தந்தை பெரியார் எதனையும் உள்ளதனை உள்ளபடி எடுத்துரைப்பவர். பெண்களை நகையணியக் கூடாது என்று வற்புறுத்தியவர் பெரியார். ஒப்பனைப் பொருட்களை விற்கும் விற்பனைக் கூடங்களில் நிறுத்திவைக்கப் பெற்றுள்ள அழகிய பொம்மைகளைப் போலப் பெண்கள் விளங்கக் கூடாது என்று பெரியார் வற்புறுத்துவார். ஆகையால், பெரியாரைப் பற்றி எழுதப் பெற்றுள்ள இக்காப்பியத்திலும் பிற காப்பியங்களைப் போல எடுத்துக்காட்டு உவமையணி, உருவகம் முதலிய அணிகள் மிகுதியாக இடம் பெறவில்லை. எனினும் தற்குறிப்பேற்றம் என்ற அணி இந்நூலில் 215 - ஆம் பாடலில் இடம் பெற்றுள்ளது. அப்பாடல் பின்வருமாறு.

சென்னையிலே பெரியாரைச் சிறையில் வைத்துச்

சிலநாட்கள் மகிழ்வுற்ற முதல மைச்சர்

பின்னென்ன நினைத்தாரோ தெரிய வில்லை

பெல்லாரிச் சிறைச்சாலைக் கனுப்பி விட்டார்

சென்னையிலே வைத்திருந்தால் மக்கள் கூட்டம்

சிறையிலுள்ள பெரியாரை மீட்டுச் செல்ல

முன்வந்து போராட்டம் நடத்து தற்கு

முனைந்திடலாம் என்றெண்ணி இருக்கக் கூடும்.

உலகில் இயல்பாக நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் நூலாசிரியர் தம்முடைய குறிப்பையும், விருப்பையும், கற்பனையையும் ஏற்றி உரைப்பதே தற்குறிப்பேற்ற அணியாகும். சென்னை மாகாண அரசு தந்தை பெரியாரை நிருவாகக் காரணங்களுக்காகச் சென்னைச் சிறையிலிருந்து பெல்லாரிச் சிறைக்கு மாற்றியது. தொடர்ந்து தந்தை பெரியாரைச் சென்னைச் சிறையில் வைத்திருந்தால் தமிழ்நாட்டு மக்கள் பொங்கியெழுந்து, புரட்சி செய்து, சிறையை உடைத்து அவரை மீட்டுக்கொண்டு போய்விடுவார்கள் என்று அஞ்சியே அரசு அவரைப் பெல்லாரிச் சிறைக்கு மாற்றியதாகக் கவிஞர் கூறியிருப்பது தற்குறிப்பேற்ற அணியாகும்.

பெரியாரின் முதன்மையான கொள்கைகள் கடவுள் மறுப்பு, வருணாசிரமதரும எதிர்ப்பு, பார்ப்பனிய மேலாதிக்க எதிர்ப்பு, பெண்கள் விடுதலை, சாதி மறுப்பு முதலியன ஆகும். பெரியாரின் இக்கொள்கைகளை விளக்கும் வகையில் இக்காவியத்தில் 122-ஆம் பாடல் உள்ளது.

அரசியலில் சுதந்திரத்தை அடையும் முன்னர்

அய்யர்களின் ஆதிக்கம் நீக்கு தற்கும்

உரிமையுடன் பெண்களெங்கும் உலவு தற்கும்

உழவர்க்கே நிலம் சொந்த மாக்கு தற்கும்

தரமின்றி வாழ்கின்ற தாழ்த்தப் பட்டோர்

சரிசமமாய் வாழ்வதற்கும் சமயம் சாதி

பரப்பிவரும் பார்ப்பனரை வீழ்த்து தற்கும்

பணிபுரிய வேண்டுமென்று பெரியார் சொன்னார்.

என்பது அப்பாடல் ஆகும்.

உலகத்தில் மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று ஆசைகளைத் துறந்தவர்களாலும் பதவி ஆசையைத் துறப்பது அரிதாகும். தந்தை பெரியார் அவர்கள் 1937 - இல் முதலமைச்சர் பதவி தம்மைத் தேடிவந்த போதும் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார்; தம் உயிரினும் மேலாகத் தாம் செய்யக் கருதிய சமுதாயச் சீர்திருத்தத்திற்கு முதலமைச்சர் பதவி தடையாக இருக்கும் என்று பெரியார் கருதியதே இதற்குக் காரணம் ஆகும். இதனைக் குறித்து நம் கவிஞர் பாடும் பாடல் பின்வ ருமாறு. 239)

பதவிசுகம் கண்டுவிட்டால் பாதை மாறிப்

பகுத்தறிவு, சீர்திருத்தம் பாழாய்ப் போகும்,

அதனாலே பதவி வேண்டாம் என்று சொன்ன

அய்யாவை இராசாசி சந்தித் தார்கள்

பதவியேற்க உதவிகளைச் செய்வ தாகப்

பகைமூட்டும் பார்ப்பனரே சொன்ன போழ்தும்

பதவியினை இப்போழ்து நீதிக் கட்சி

பகிர்ந்துகொள்ள முனையாது பெரியார் சொன்னார்.

தந்தை பெரியார் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று தம்முடைய சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பினார். சிங்கத்தை அதன் குகையிலேயே சென்று சந்திப்பதைப் போல எங்கெல்லாம் பார்ப்பனீய மேலாதிக்கம் கொடிகட்டிப் பறக்கின்றதோ, அங்கெல்லாம் சென்று கடவுள் மறுப்புக் கொள்கைகளை எடுத்துரைப்பது பெரியாரின் வழக்கம் ஆகும். பெரியாரின் இந்த இயல்பினைக் கவிஞர் மணியன் அவர்கள் ஓரிடத்தில் விரிவாகக் கூறுகின்றார். சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர்கள் என்று சொல்லிக் கொண்டு தமிழுக்கும், தமிழின மக்களுக்கும் எதிராக எல்லையற்ற தொல்லைகளைச் செய்துவரும் பார்ப்பனர் களுக்கு எதிராகப் பெரியார் அவர்கள் சிதம்பரத்தில் பொதுக் கூட்டம் கூட்டிப் பேசினார்கள். அதனை மணியன் அவர்கள் 287 - ஆம் பாடல் மூலம் விளக்கியுள்ளார்.

அப்பாடல் பின்வருமாறு:

சிதம்பரத்தில் நால்வருண மறுப்புக் கூட்டம்

சிறப்பாக நடந்தபோழ்து பெரியா ராங்கே

மதம் பற்றிச் சாதிபற்றிப் புராணம் பற்றி

மனுநீதி நால்வருண மடமை பற்றி

விதிபற்றி இதிகாசப் புரட்டுப் பற்றி

வேதங்கள் ஓதுகின்ற சூதைப் பற்றிச்

சதி செய்யும் பார்ப்பனர்கள் சூழ்ச்சி பற்றிச்

சாத்திரங்கள் கொடுமைபற்றி முழங்கி னார்கள்.

இவ்வாறு, கரும்பின் அடிமுதல் நுனிவரை இனிப்பது போலப் பெரியார் காப்பியத்தில் மணியன் அவர்கள் பெரியாரின் கொள்கைகளை விளக்கமுற எடுத்துரைத்துள் ளார்கள், மாணிக்கவாசகர் பாடல்களைக் கேட்டுச் சிவனடி யார்கள் உருகுவது போலப் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட தமிழின உணர்வுள்ள தமிழர்களுக்குப் பெரியார் காவியப் பாடல்கள் ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிக்கும் என்பது திண்ணம். பெரியாரின் கொள்கைகள் வாழ்க! வளர்க! பேராசிரியர் மணியனின் தமிழினத் தொண்டு தொடர்வதாக!

Back to blog