தமிழர் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாறு - இது பெரியார் யுகம்...

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://periyarbooks.com/products/thamilar-thalaivar-thandai-periyar-vazkkai-varalaru 
இது பெரியார் யுகம்...

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய காந்தியின் அரசியல் வாழ்க்கை உச்சம் பெறத் துவங்கிய காலகட்டத்தில் தந்தை பெரியார் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர். கதர் விற்றவர்; கள்ளுக்கடை மறியல் செய்தவர்; மதுவை ஒழிக்க தன் வீட்டுத் தென்னந்தோப்பை வெட்டி நாசமாக்கியவர்.

பெரியார் மகாகவி பாரதிக்கு மூன்று ஆண்டுகள் மூத்தவர்; மறைமலையடிகளுக்கு மூன்று ஆண்டு இளையவர். திரு.வி.க பெரியாரைவிட நான்கு ஆண்டுகள் இளையவர். பாரதியைத் தவிர மற்ற இருவரும் கொள்கையாலும் அரசியலாலும் இணைந்திருந்தனர். பாரதியைப் பற்றி பெரியாரின் பதிவுகள் எதுவும் தென்படவில்லை. திரு.வி.கவும் பெரியாரும் காங்கிரஸ்காரர்கள் தான். 1919 முதல் 1925 வரை காங்கிரஸ் இயக்கத்துக்காக கடுமையாக உழைத்தவர் பெரியார்.

ஆனால் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாடு பெரியாரின் அரசியல் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக மாறியது. பெரியார் முன்வைத்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த தீர்மானத்தை திரு.வி.க உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள் எதிர்த்து முறியடித்தனர். பெரியார் காங்கிரஸிலிருந்து வெளியேறினார்.

அரசியல் களத்தை உதறிவிட்டு சமூகப்புரட்சிக்கு தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.

தீண்டாமை ஒழிய வேண்டுமானால் வருணாச்சிரமம் ஒழிய வேண்டும் என்பது பெரியாரின் பிரகடனமானது. காங்கிரஸ், இந்துமதம் பார்ப்பன ஆதிக்கம் இவை ஒழிக்கப்படவேண்டியவை என்று காந்தியிடம் சொன்னார். காந்தியின் வழிமுறைகளில் பெரியார் உடன்படவில்லை. 1929இல் செங்கற்பட்டில் முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டைக் கூட்டினார். கலப்புத் திருமணமும் விதவைத் திருமணமும் புரோகித மறுப்பும் தமிழ்நாட்டில் பரவ ஆரம்பித்தன. இந்து மதத்தை மூர்க்கத்துடன் எதிர்த்தார். 1938இல் இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டு சிறை சென்றார். அப்போது நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் அக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அதற்குப் பிறகு நீதிக்கட்சி திராவிடர் கழகமானது. தி.கவிலிருந்து அரசியல் கட்சிகள் கிளைத்தன. 50 ஆண்டு கால திராவிட அரசியலின் கருத்தியல் வேராக விளங்கி வருகிறார் பெரியார்.

94 ஆண்டுகள் வாழ்ந்த பெரியாரின் முதல் 60 ஆண்டுகால வாழ்க்கையை சாமி சிதம்பரனாரின் தமிழர் தலைவர்' என்ற இந்த நூல் பதிவு செய்கிறது. பெரியாரின் வாழ்நாள் காலத்திலேயே அவரது ஒப்புதலுடன் வெளிவந்த இந்த நூல் பெரியாரின் நேர்மைக்கும் வெளிப்படைத் தன்மைக்கும் சான்றாகத் திகழ்கிறது. தன்னைப் பற்றிய எதிர்மறையான விஷயங்களையும் எந்தத் தயக்கமுமின்றி ஒளிமறைவில்லாமல் வெளிப்படுத்தக் கூடியவர் அவர். இந்திய விடுதலை நாள் ஓர் துக்க தினம் என்று பிரகனப்படுத்தியவர் அவர். சமூக விடுதலை இல்லாமல் அரசியல் விடுதலை அர்த்தமற்றது என்று சொன்னார். அவருடன் முரண்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் எல்லாம் அவரை ஒருபோதும் பிரிந்து நின்றதில்லை. அப்படிப்பட்ட தமிழர் தலைவரின் சரிதையின் மறுபதிப்பு இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவசியமான ஒன்று - வாதிக்கவும் விவாதிக்கவும்.

சந்தியா நடராஜன்

 

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

Back to blog