தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - முன்னுரை

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு - முன்னுரை

தலைப்பு

தமிழ்ச் சமூகத்தில் சமயம் சாதி கோட்பாடு

எழுத்தாளர் ரவி வைத்தீஸ்வரன்,ரா. ஸ்தானிஸ்லாஸ்
பதிப்பாளர் மேன்மை வெளியீட்டகம்
பக்கங்கள் 336
பதிப்பு முதற் பதிப்பு - 2016
அட்டை காகித அட்டை
விலை Rs.250/-

 

புத்தகத்தை இங்கே வாங்கலாம்

https://periyarbooks.com/thamiz-samoogaththil-samayam-saathi-kotpaadu.html

முன்னுரை

இந்திய சமூக வரலாற்றில் சமயம் ஒரு முக்கியப் பாத்திரத்தை வகித்தாலும், சமயம் என்ற பாடத்துறையோ அல்லது ஆராய்ச்சித் துறையோ தமிழ்நாடு மற்றும் இந்திய உயர்கல்வி பீடங்களில் இல்லை. இந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியாக இந்தியா, இலங்கை, கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த புத்திஜீவிகளின் விவாதங்களை முன்வைக்கும் நூல் இது.

இத்தொகுப்பில் உள்ள இக்கட்டுரைகள், தற்கால சமய, பண்பாட்டு அரசியலை விளங்கிக் கொள்ளும் நோக்குடன், அண்மை காலத்தில் கோட்பாடு ரீதியாக எழுச்சிப்பெற்ற பின் அமைப்பியல், பின்காலனித்துவம், விளிம்புநிலை மக்கள் ஆய்வுமுறை, பின்காலனிய மதச்சார்பின்மை ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன.

மேலும் இத்தொகுப்பு தமிழ் ஆய்வுலத்தில் நன்கு அறியப்பட்ட முக்கியமான ஆய்வாளர்களின் கட்டுரைகளை ஒருங்கிணைக்கிறது. பின்வரும் ஆய்வாளர்களின் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.

முத்துமோகன், ஓவியர் ராமச்சந்திரன், நல்லூர் சரவணன், ரவி வைத்தீஸ்வரன், வீ.அரசு, முப்பால்மணி, ரெங்கையாமுருகன், ஸ்டாலின் ராஜாங்கம், பொ.வேல்சாமி, ந.ரவீந்திரன், ரா.பூங்குன்றன், சேக்கிழார் அடிபொடி டி.என்.ராமச்சந்திரன், வெ.நெடுஞ்செழியன், ரா.ஸ்தனிஸ்லாஸ் ஆகியோர் எழுதியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான கோயில்களும் மடங்களும், தேவாலயங்களும் மற்றும் பள்ளிவாசல்களும் நிறைந்து இருக்கும் தமிழ்நாட்டில், இங்கு நிலவும் மதங்கள், அவைகளின் தோற்றங்கள், வளர்ச்சிகள் மேலும் இவைகளுக்கும் ஏனைய சமூக அரசியல், பொருளாதார தளங்களுக்கும் இருக்கின்ற தொடர்புகள் பற்றிய விரிவான ஆராய்ச்சிகளும், புரிதல்களும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

இந்த நிலைமைக்கு சுதந்திரகாலந்தொட்டு தோன்றிய தமிழ் நிலப்பகுதியில் சமய சார்பற்ற, திராவிட மொழி சார்ந்த அடையாள பண்பாட்டு அரசியலின் தாக்கமும் ஒரு முக்கிய காரணியாக அமைந்திருக்கலாம். இரண்டாவதாக தமிழ் இந்திய சமூக வரலாற்றில் சமயம் ஒரு மிக முக்கிய பாத்திரத்தை வகுத்தாலும், சமயம் என்ற தனிப்பாடத் துறையோ/ஆராய்ச்சித் துறையோ/தமிழ்நாட்டு/இந்திய உயர்கல்விப் பீடங்களில் ஏனைய துறைகள் போல் (உதாரணமாக வரலாறு, சமூகவியல், தொல்பொருள்) அமையாததே இன்னொரு முக்கிய காரணியாக எடுத்துக் கொள்ளலாம். இதற்கு நல்ல உதாரணமாக, தமிழ் சூழலில் சமயம் பற்றிய ஆய்வுகளை நோக்கும் போது சமயம் அல்லாத பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களே, குறிப்பாக தமிழ் துறையைச் சார்ந்தவர்களே முக்கிய பங்களிப்பை செய்துள்ளார்கள். மேலும் வெவ்வேறு துறையைச் சார்ந்தவர்களும் முக்கியப் பங்களிப்பை வகுத்துள்ளனர்.

இந்த நூல் தொகுப்பு சமயங்கள் குறித்து ஆய்வாளர்கள், பல்துறை நோக்கில் எழுதிய முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை இங்கே ஒன்று சேர்க்கிறது. நீண்டகால வரலாறு கண்ட தமிழ்ப் பிரேதசங்களில் நிலவிய சமயங்களையும், அதன் பரிணாம வளர்ச்சிகளையும், அவற்றுக்கும் ஏனைய சமூக அரசியல், பொருளாதார தளங்களுக்கும் நிலவிய தொடர்பு களையும் ஊடாட்டங்களையும் பற்றியே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன. "வரலாற்று நோக்கில் ஆன்மீகத் தலங்கள் மற்றும் மரபுசார் சமய பண்பாட்டுத் தளங்கள்' என்னும் தலைப்பில் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் ஜூன் மாதம் 2014 அன்று நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் அறிமுகமான சில கட்டுரைகளின் விரிவாக்கமே இந்நூல் ஆகும்.

இக்கட்டுரைகள் பகுதி - 1, பகுதி - II, என்ற இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பகுதியில் அடங்கும் கட்டுரைகள் தமிழகத்தின் நவீன காலத்தில் நிலவிய சமயங்கள், குறிப்பாக காலனிய கால பகுதிகளில் இடம் பெற்ற சமய எழுச்சிகள் பற்றியும், அவற்றுக்கும் ஏனைய சமூக பொருளாதார அரசியல் சக்திகளுக்கும் உள்ள தொடர்புகளையும் ஊடாட்டங்களையும் ஆராய்கின்றன. இரண்டாம் பகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் இவ்வகை நவீன காலத்தை முக்கியப்படுத்தும் நோக்கின்றி, தமிழ்ப் பிரதேசங்களில் நிலவிய பல்வேறு சமயங்களையும், அவைகளின் பரிணாமங்களையும் வளர்ச்சிகளையும் விளக்குகின்றன.

முதலாம் பகுதியில் அடங்கும் கட்டுரைகள் தற்கால சமய/ பண்பாட்டு அரசியலை விளக்கிக் கொள்வதன் நோக்குடன் அமைந்திருக்கின்றதற்கு மட்டுமின்றி, அவை தற்கால ஆய்வு முறைகளின் புதிய பரிணாமங்களைப் பிரதிபலிக்கின்றன. குறிப்பாக அண்மைக்காலத்தில் எழுச்சிப் பெற்ற கோட்பாடு ரீதியான (Theoretical) வளர்ச்சிகள், முக்கியமாக பின் அமைப்பியல் (Post Structuralism) பின் காலனித்துவம் (Post Colonialism) விளிம்பு நிலை மக்கள் ஆய்வு முறை (Subaltern Studies), பின் காலனிய மதசார்பின்மை (Post Secular Studies) போன்ற அணுகுமுறைகளின் தாக்கத்தையும் பிரதிபலிக்கின்றன. இவ்வகைப்பட்ட அண்மைக்காலக் கோட்பாட்டு அணுகு முறைகள்தான், நவீனகால எழுச்சிகளின் முக்கியத்துவத்திற்கு உரியனவாக விளங்குகின்றன. இத்தொகுப்பில் முதலிடம் கூட கொடுக்கப்பட்டிருக்கிறது.

எனவே நாம் உபயோகிக்கின்ற 'சமயம்' என்ற சொல் பற்றிய வரையறையும், சமயங்கள் குறித்த அணுகுமுறைகளும் புரிதல்களும் இந்த நவீன காலத்தில், குறிப்பாக காலனிய காலத்தில்தான் தீர்மானிக்கப்பட்டன. நாம் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளுகின்ற இந்திய வரலாறு கட்டமைப்பு கூட இந்த மேற்கத்திய பாணியில்தான் காலனிய காலத்தில் நிர்ணயிக்கப்பட்டது.

பகுதி - 1

இந்த அண்மைக்காலக் கோட்பாட்டுப் பின்புலத்தில் தான் முத்து மோகன் முதற்தொகுதியை ஆரம்பிக்கும் வகையில் தம் கட்டுரையில், ஒரு சுவாரசியமான கேள்வியை எழுப்புகிறார், 'நமது மதங்களை உருவாக்கியவர் யார்?' இதற்குப் பதில் கூறும் வகையிலும், அண்மைக்கால தெற்காசியச் சமயங்கள் பற்றிய முக்கியமான முன்னெடுப்புகளை விளக்குகின்ற வகையிலும் முத்துமோகன், நமது சமயங்கள் காலனிய நவீன காலகட்டத்தில் எவ்வகையான மாற்றம் அடைந்திருக்கின்ற தென்றும் விளக்குகின்றார். குறிப்பாக ஐரோப்பிய சீர்த்திருத்தக் கிறித்துவ மதத்தை அடியொற்றி பெரும்பான்மை 'இந்து' மதமாகவும் ஏனைய மதங்கள் சிறுபான்மை மதங்களாகவும் மறு உருவாக்கம் பெற்றதென்பதையும் விளங்கப்படுத்துகின்றார். இம் மறு உருவாக்கத்தில் எவ்வாறு பல்வேறு சாதிகள், இனக்குழுமங்கள், பிரேதசங்கள் எனப் பல சமய ஆசார சடங்கு முறைகளும், நாட்டுப்புற வழிபாட்டு முறைகளும், ஐரோப்பிய காலனிய வகைப்பாடு கணக்கெடுப்பு முயற்சிகளாலும் ஆய்வு முறைகளாலும் ஒரு பெரும் குடையின் கீழ் பிராமணியம் சார்ந்த வேத பாரம்பரியத்துடன் இந்து மதமாக உருவெடுத்ததை விளங்கப் படுத்துகின்றார். இது மட்டுமல்லாமல் 'சமயம்' (Religon) என்பது தனிநபர் சார்ந்த ஒரு தனிப்பிரிவு என்றும், மதச்சார்பற்றது (Secular) என்பது அரசியல், பொருளாதாரம், சமூகம் சார்ந்த விஷயமாகவும் பிரித்து நிர்ணயிக்கின்ற வரையறை ஐரோப்பிய காலனிய காலக்கட்டத்தில் தான் உருவாக்கியது என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.

ஓவியர் ராமச்சந்திரன், முத்து மோகன் கூறுகின்ற முன்வைக்கின்ற - காலனியத்தால் மாற்றமடைந்த பல சமயக் கருத்தியல் சமூக மாற்றங்களைத் தன் ஓவிய வரைவுகள் மூலம் முன்வைக்கின்றார். குறிப்பாக ஐரோப்பிய காலனிய, கிறித்துவ மிஷனரிமார்கள் வழிவந்த தமிழ் இந்தியச் சமூகங்களைப் பற்றின மதிப்பீடுகளையும், அதன் தாக்கங்களையும் கேள்விக்குள்ளாக் குகின்றார். இதன் விளைவுகளால் தான் நமது தற்காலச் சமூகம் குறித்த உரையாடல்கள் அனைத்தும் தலையும், வாலும் இல்லாமல் போல இருக்கின்றது என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். இதற்குள்தான் நவீன காலத்தில் தோன்றின ஆரிய திராவிடப் பிரிவினைக் கதையாடல்களை நோக்குகின்றார். இந்திய சமூகம் தமது சொந்த தடையங்களிலிருந்து பார்க்காமல் ஐரோப்பிய காலனிய தரவுகளை முன்னெடுத்த செயல்பாட்டின் விளைவுகளே என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்.

வீ. அரசுவின் கட்டுரை காலனியத்தின் தொடக்க காலத்தில் எழுச்சிப் பெற்ற தமிழ்நாட்டு சமய பண்பாட்டு சீர்திருத்த இயக்கங்களின் பின்புலமாக அமைந்த மேலைநாட்டுச் சிந்தனை மரபுகளின் தாக்கங்களையும் விளைவுகளையும் ஆராய்கின்றது.

ஐரோப்பிய சிந்தனை மரபின் தாக்கத்தின் எதிரொலி முதன்முதலாக கல்கத்தாவில் நிலைப்பெற்றது என்ற கருத்தாக்கத்திற்கு மாறாக, அரசு அவர் கட்டுரையில், தமிழ் பிரதேசங்களின் இதுவரையில் பெரிதும் அறியாத ஐரோப்பிய வழிவந்த பகுத்தறிவு இயக்கங்களின் வரலாற்றை முன்வைக்கின்றார். மேலும் இந்தப் பகுத்தறிவு இயக்கம் தமிழ்ப் பிரதேசப் பெரு நகரங்களில் குறிப்பாக இந்தியாவிலும் இலங்கையிலும் (சென்னை, யாழ்பாணம்) உருவாகின என்கிறார். இவை ஐரோப்பிய பகுத்தறிவு இயக்கங்களின் கிளைகளாகச் செயல்பட்டதையும் குறிப்பிடுகின்றார்.

இத்தகைய இயக்கம் வங்காளத்தில் உருவான மிதவாத இயக்கங்களைவிடப் புரட்சிகரமானது என்றும், இதன் விளைவுகள் தமிழ்நாட்டு சிந்தனையாளர்களின் பதிவுகளிலும் இயக்கங்களிலும் காணலாம் என்ற கருத்தை முன்வைக்கிறார். இதற்கு உதாரணமாக, முக்கியமாக வள்ளலார், அயோத்திதாசர், பெரியார் போன்ற நபர்களைக் குறிப்பிடுகிறார்.

நல்லூர் சரவணனின் கட்டுரை தமிழ் திராவிட அடையாள பண்பாட்டு அரசியலின் சமய வேர்களை, அதன் முக்கிய ஆய்வு நோக்காக எடுத்துக் கொள்கிறது. இவ்வேர்களை ஒரு நீண்ட வரலாற்றுப் பின்புலத்தில் அணுகுகிறார்.

விஜயநகரம் மற்றும் நாயக்கர் அரசுகளின் ஊடுருவல் வழிவந்த அத்வைத, வேதாந்த, வைணவ மேலாண்மையால் இங்கு நிலவிய தமிழ் சைவ மரபு பின்தள்ளப்பட்டது மட்டுமில்லாமல் தமிழ் மொழியில் சமஸ்கிருத மொழி மற்றும் தெலுங்கு மொழியின் தாக்கங்களும் அதிகரித்து மணிப் பிரவாளம் என்ற புதிய நடை உருவாகியது. இவ்வகையான பின்புலத்தில்தான் சோமசுந்தர நாயகரென்னும் தமிழ் சைவக் கிளர்ச்சியாளரின் வாழ்வையும், பங்களிப்பையும் பணிகளையும் தம் கட்டுரையில் விவரிக்கின்றார்.

வைத்தீஸ்வரனின் கட்டுரை சரவணனின் விவாதத்தைத் தொடருகின்ற வகையில் சோமசுந்தர நாயகரின் முதன்மைச் சீடரான மறைமலையடிகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது.

மறைமலையடிகள் தமிழ் சைவ மறுமலர்ச்சிக்கு முக்கியத் தலைவராக மட்டுமல்லாமல் திராவிட தமிழ் தேசியத்திற்கு ஒரு அறிவார்ந்த அடித்தளத்தையும் கட்டமைத்துள்ளார் என்ற கருத்தை முன்வைக்கிறார். மேலும் பெரியாரின் தலைமையில் எடுத்துச் சென்ற திராவிட இயக்கமும், நவீன சைவ இயக்கமும் முரண்படுகின்ற தருணத்தில் இந்தக் கட்டுரையை ஆரம்பித்து, அவைகளிடம் இருக்கும் முரண்களுக்கு அப்பால், இவைகளுக்குள் அடங்கிய பொதுவாக இருந்த சீர்த்திருத்த கருத்தியல்களின் ஒருமைப்பாட்டை இந்தக் கட்டுரை முன்நிறுத்துகிறது. ஆதலால் சைவ, வேதாந்த, வைணவ சமயச் சண்டைகளுக்கு ஊடாக வழிவந்த கருத்தியல் திராவிட இயக்கத்திற்கு ஒரு பலமான அடித்தளத்தை நிறுவினது என்று இந்தக் கட்டுரையின் மூலம் நாம் அறியலாம்.

முப்பால் மணியின் சுருக்கமான ஆனால் முக்கியத் தரவுகளைக் கொண்டள்ள ஆய்வுக்கட்டுரை, திராவிட இயக்கக் கருத்தியலின் முன்னோடியான மனோன்மணியம் சுந்தரனாரின் வாழ்க்கைப் பணியை முன்வைக்கிறது.

சுந்தரனாரை அக்காலத் தென்னிந்தியாவின் முதன்மையான கல்வியாளராக அடையாளப்படுத்துகிறார். அவருடைய பன்முகப் பங்களிப்புகள் பல்வேறு துறைகளில் குறிப்பாக தென்னிந்திய வரலாறு, தொல் பொருள் ஆய்வு, தமிழ் இலக்கியம், நாடகம், தமிழ் இலக்கிய வரலாறு சார்ந்ததாக அமைந்தது.

ஐரோப்பியத் தத்துவவியலில் முதுகலை பயின்ற சுந்தரனார் ஐரோப்பியத் தத்துவ வாதத்தையும் இந்திய தமிழ் சமய தத்துவ வாதத்தையும் குறித்து மிக முக்கியமான ஐரோப்பிய சிந்தனையாளர்களுடனும், இந்திய சிந்தனையாளர்களுடனும் உரையாடியதில் முன்னோடியாக இருந்தார். இதன் தாக்கங்களை அவர் தமிழர் வரலாறு, சமய இலக்கிய மரபுகள் பற்றி எழுதியிருக்கும் பல்வேறு கட்டுரைகளில் அடையாளம் காணலாம்.

திராவிட இயக்க கருத்தியலுக்கு சுந்தரம்பிள்ளை ஆற்றின பங்களிப்பை அவரின் பல்வேறு பங்களிப்போடு இணைத்துக் கூறுகிறார் முப்பால் மணி.

சேக்கிழார் அடிப்பொடி தி. ந. இராமச்சந்திரன் எழுதிய பன்னிரு திருமுறைகள் சாற்றும் அருட்செய்திகள் என்ற கட்டுரையில் பெரிய புரானத்தின் முக்கியத்துவத்தையும், அவற்றின் படைப்புச் சாதனைகளை கூறும் அதே சமயம் சமஸ்கிருத வேதங்களை புறந்தள்ளி தமிழ் திருமுறைகளை முக்கியமாக கருதும் நவீன சைவ கருத்தியலுக்கு எதிராக உள்ளதை சுட்டிக்காட்டுகிறார்.

பொ. வேல்சாமி முதன் முதலாகத் தமிழில் அச்சு வடிவில் உருவான மிக முக்கியமான சைவ சித்தாந்தப் பிரதிகளை/ பனுவல்களைப் பட்டியலிட்டு அலசி ஆராய்கின்றார்.

இவர் முன்வைக்கின்ற ஒரு சுவாரசியமான கருத்து என்பது, இவர் கூறும் பதிப்பு முயற்சிகளுக்கும் தமிழ் சைவ மறுமலர்ச்சி இயக்கத்தில் ஈடுபட்டவர்களுக்கும் உள்ள தொடர்புகள் மிக குறைவாகவே காணப்படுகின்றன என்பதுதான் அது.

'அயோத்திதாசரின் பண்பாட்டு பௌத்தம்: கார்த்திகை தீபம் என்னும் கார்த்துல தீபம்' என்னும் ஆய்வுக் கட்டுரையில் ஸ்டாலின் ராஜாங்கம் அயோத்திதாசர் முன்வைத்த கதையாடலை வைத்துக் கார்த்திகை தீபத்தின் தற்கால புரிதல்களுக்கு மாறாக, குறிப்பாகப் பின்காலனிய புரிதலுக்கு எதிராக மக்களின் வாழ்வியல் சார்ந்து பகுத்தறிவாத விளக்கத்துடன் முன்வைக்கிறார். அதுவும் இவ் அணுகுமுறை மூலம் தீபம் குறித்த தற்கால வைதீக புராணக் கதையாடல்களில் மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை அயோத்திதாசர் கேள்விக்குள்ளாக்குகிறார் என்ற வாதத்தை இக் கட்டுரை முன்வைக்கிறது.

ரா. ஸ்தனிஸ்லாஸ் எழுதிய தமிழ்ச் சமூக வரலாற்றில் தனிநாயகம் அடிகளாரின் 'கிறித்தவமும் தமிழும்' என்னும் கட்டுரை தனிநாயகம் அடிகளாரின் பல்வேறு பங்களிப்பையும் குறிப்பாக அவருடைய கிறித்துவத்திற்கு ஆற்றிய பங்கையும் பட்டியலிட்டுச் சுட்டிக் காட்டுகிறது.

பகுதி – II

இந்தப் பகுதி ந.இரவீந்தரனின் கட்டுரையோடு தொடங்குகிறது.

இக்கட்டுரையில் தமிழ்ப் பிரதேசங்களின் வளர்ச்சியடைந்த பல்வேறு வழிபாட்டு முறைகளையும், சமயச் சடங்கு ஆச்சாரங் களையும், அவற்றின் பல்வேறு பரிணாம வளர்ச்சிகளையும் ஒரு விரிந்த விமர்சனக் கண்ணோட்டத்தில் சுட்டிக் காட்டுகின்றது.

முக்கியமாக இவைகளுக்கும், அங்கு நிலவுகின்ற சமூகப் பொருளாதார, இனக்குழும, சாதி வளர்ச்சிகளுக்கும் இடையேயான இணைப்புகளையும் ஊடாட்டங்களையும் மிகச் சிறப்பாக எடுத்துக் காட்டுகிறார். இனக்குழுச் சமூகத்திலிருந்து தமிழ்ச் சமூகம் சாதி, சமூக வழிமுறைகளுக்கு மாறுகின்ற மாற்றத்திற்கு இவர் முக்கிய அழுத்தத்தையும் கொடுக்கின்றார். இந்தச் செயல்பாடு வீரயுகச் சங்க காலத்தில் தொடங்கி சோழப்பேரரசு காலத்தில் தான் விரிவடைந்தது என்ற கருத்தை முன்வைக்கிறார். இந்த முக்கியமான வரலாற்று மாற்றம், தமிழ்ப் பகுதிகளில் மட்டும்தான் தொடர்ச்சியாகவும் தெளிவாகவும், அதன் தொடர்ச்சியான இலக்கிய வரலாறு மூலம் அவதானிக்க முடிகிறது. சோழப்பேரரசு காலக்கட்டம்தான் தற்போது நிலவுகின்ற பெருந்தெய்வ வழிபாடு முறைகளுக்கும், சாதி முறைகளுக்கும் அடித்தளம் நிறுவியது.

இங்கேதான் இரவீந்திரன் சுவாரசியமான ஒரு கருத்தை முன்வைக்கிறார். அந்தக் கருத்து என்பது அம்பேத்கர், பெரியார் போன்றவர்கள் பெருந்தெய்வம் சார்ந்த இந்து சமயத்திற்கும், இனக் குழுமங்களின் காலத்திலிருந்து வந்து எஞ்சிய இன்னும் நிலவுகின்ற நாட்டார் தெய்வ வழிப்பாட்டு முறைகளுக்கும் வித்தியாசம் காணத் தவறினார்கள் என்கிறார்.

இது மட்டுமல்லாமல் பிராமண வெள்ளாள வைதீக பண்பாட்டு மேலாதிக்கத்துக்கு வழி சமைத்தது. இந்த பிராமண மேலான்மைக்கு எதிராகத்தான் 13ஆம் நூற்றாண்டு தொடங்கியது. வெள்ளாளரால் சைவ சித்தாந்தம் ஒரு நிறுவனமயமாக்கப்பட்டு முன்னெடுக்கப் பட்டது என்று கட்டுரையில் சுட்டுகிறார்.

வெகுசனத் தன்மை எழுச்சிப் பெற்ற காலக்கட்டத்தில் திராவிட அரசியலும் எழுச்சிப் பெற்றிருந்தது. அதற்கு எதிராக கடவுளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்த்த வெகுசன செயல்பாட்டின் வரலாற்றை தம் கட்டுரையில் கூறுகிறார் ரெங்கையா முருகன்.

பூங்குன்றன் அவர்களின் கட்டுரையில் திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் நடைபெறும் முக்கியச் சடங்கு ஆச்சாரங்களை மையமாக வைத்து அதன் தொடக்ககால மற்றும் இடைக்கால மற்றும் பொருளாதாரப் பண்பாட்டு வேர்களை இந்தக் கட்டுரையில் ஆராய்கின்றார். இவர் இவ்வகையான சடங்கு ஆச்சாரங்களைப் பழங்காலச் சமூகக் கால்நடை வளர்ப்பிலும் இனக் குழுமங்களில் தோன்றிய பெண் தெய்வ வழிபாட்டு முறைகளிலும் அடையாளம் காணுகின்றார். பல்லவர் காலத்தில் தொடங்குகின்ற பக்தி சைவ இயக்கம் இவ் வகையான சடங்கு ஆச்சாரங்களையும் குறிப்பாகக் கொற்றவை, பிடாரி போன்ற பெண் தெய்வங்களையும் படிப்படியாக உள்வாங்கி கரைத்து ஆணாதிக்கத்தின் நிழலில் உண்ணாமலையாக மாற்றம் அடைகின்றது என்று சுட்டிக் காட்டுகின்றார்.

'பண்பாட்டு நோக்கில் திருவூடல்' எனும் தலைப்பில் நெடுஞ்செழியன் எழுதிய கட்டுரை இனக்குழு சமுதாய வீழ்ச்சியில், நகரியம், பெண்ணை வீழ்த்தி இல்லத்திற்குள் ஒடுக்கினாலும், அவள் ஆளுமையை முற்றாக வீழ்த்த முடியாத வகையில் ஆணின் சமூக மதிப்போடு பின்னப்பட்டிருப்பதன் குறியீடாக ஊடல்' திகழ்வதை எடுத்துரைப்பதோடு, ஊடலுக்கான காரணியாக, திணைநிலைகக்கால பரத்தமையைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தின் மதிப்பு என்ற காரணியை முன்னிறுத்து வதையும் விளக்குகிறது. இவற்றோடு திருவண்ணாமலையில் நடைபெறும் திருவூடல் விழாவின் பன்முகங்களாக குறிஞ்சி, முல்லை ஆகிய திணைகளின் வாழ்வியலின் பங்கு, வேளாண் வாழ்வியலின் ஆளுமை ஆணாதிக்கத்திற்க்கு எதிரான பெண்ணின் உரிமை செயல்பாடான ஊடல் விளங்குதல், இல்லறக் கட்டமைப்பில் பெண்களின் இடம், அரசு மற்றும் வணிக நிறுவனங்களின் பங்கேற்பு, குலக்குறி வழிபாடு ஆகியன குறித்து விளக்குகின்றது.

இந்த ஆய்வுக் கட்டுரைகளை ஒருங்கிணைக்க ஏதுவாக இருந்த பன்னாட்டு கருத்தரங்கம், அதனைச் சிறப்பாக நடத்த உதவிய கல்வி நிறுவனங்களுக்கும், நிதி நல்கிய UCG, ICHR மற்றும் ICSSR ஆகிய இந்திய அரசு நிறுவனங்களுக்கும், அரசு கலை கல்லூரி வரலாற்று துறை திருவண்ணாமலை, மானிடோபா பழ்கலைக்கழக கலை வரலாற்றுத் துறைக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். கருத்தரங்கில் கலந்து கொண்ட ஆய்வாளர்களுக்கும், தங்கும் இட வசதி அளித்து உதவிய ரமணாஸ்ரமம் மற்றும் சேஷாத்திரி ஆசிரம நிர்வாகத்திற்கும் நன்றியினை உரித்தாக்குகிறோம். கருத்தரங்கிற்கு வருகை புரிந்து ஊக்கமளித்து ஆய்வுக் கட்டுரைகளை ஒருங்கிணைந்து புத்தகமாக வெளியிட் உதவிய அனைத்து பங்கேற்பாளருக்கும் எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இப்புத்தகம் வெளியிட அனைத்து வழிகளிலும் எங்களுக்கு உறுதுணையாக இருந்த முத்தையா வெள்ளையன் மற்றும் மேன்மை பதிப்பகத்திற்கும் எங்களின் நன்றிகள் பல.

ரவி வைத்தீஸ்வரன்

ரா. ஸ்தானிஸ்லாஸ்

Back to blog