இந்து இந்தி இந்தியா

தலைப்பு இந்து இந்தி இந்தியா
எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரை
பதிப்பாளர் அடையாளம்
பக்கங்கள் 286
பதிப்பு இரண்டாம் பதிப்பு - 2014
அட்டை காகித அட்டை
விலை ரூ.250/-

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://www.periyarbooks.in/hindhu-hindhi-india.html

முன்னுரை 

தமிழக அரசு 2002 ஆம் ஆண்டில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பல்வேறு விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. அச்சட்டத்தின் நோக்கத்தை நன்கு புரிந்து கொண்ட காஞ்சி சங்கராச்சாரியார், அதனை ஆதரித்து சென்னைக் கடற்கரையில் ஒரு மாநாட்டையே நடத்தினார். வெளிப் படையான ஆர்எஸ்எஸ் ஆதரவாளரான அவருடைய இச்செய்கை வியப்புத் தரக்கூடியதல்ல. ஆனால் அந்த மாநாட்டில் அவருடைய தொண்டர்களில் ஒருவராகப் பணியாற்றிய இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், பிற்பட்ட வகுப்பினரின் நலன் காக்கும் வீரர்களில் ஒருவராகப் பெரியாரின் அதிகாரபூர்வமான வாரிசு எனச் சொல்லிக்கொள்பவரால் முன்னிறுத்தப்பட்டு வந்தவர். அத்தகைய பெருமை வழங்கப்பட்ட மற்றொருவர் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி. வேணுகோபால். இவர் மதமாற்றத் தடைச் சட்டத்தை ஆதரித்து தினமணியில் கட்டுரை எழுதினார். அதில் மதச் சிறுபான்மையினர், மதமாற்றத்திற்குச் செய்யும் பிரசாரங்களில் வெறித்தன்மை இருப்பதாகக் கூறினார். 1981இல் மண்டைக்காட்டில் நடந்த மதக்கலவரங்களைத் தூண்டியவை மதச்சிறுபான்மைத் தலைவர் களின் பேச்சுகள் என்று வாதிட்டார். இதில் வேடிக்கை என்ன வென்றால், தமிழ்நாட்டில் பெரும் ரத்தக் களரியை ஏற்படுத்து வதற்காக ஆர்எஸ்எஸ் நடத்திய முதல் ஒத்திகையான மண்டைக் காட்டுக் கலவரம் பற்றி விசாரணை செய்ய எம்ஜிஆர் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டவர்தாம் இந்த நீதியரசர் பி.வேணுகோபால். அந்த நிகழ்ச்சியை ஆய்ந்தறிந்து அரசாங்கத்திடம் அவர் சமர்ப்பித்த அறிக்கை கூறுகிறது: 

ஆர் எஸ் எஸ் போர்க்குணமிக்க, வலுச்சண்டைக்குப் போகிற நிலைப்பாடைக் கொண்டுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான இந்துக்களின் உரிமைகள் எனத் தான் கருதுபவற்றுக்காகப் போராடு பவனாகத் தன்னை முன்னிறுத்திக் கொள்கிறது. சிறுபான்மையினர் களுக்குள்ள இடம் எது என்பதை அவர்களுக்குக் கற்பிப்பதைத் தனக்குத் தானே வழங்கியுள்ளது. வன்முறையைத் தூண்டிவிட ஆர்எஸ்எஸ் கையாளும் முறைகள்: 

கிறிஸ்துவர்கள் இந்த நாட்டிற்கு விசுவாசமுள்ள குடிமக்கள் அல்லர் என்று பிரசாரம் செய்து பெரும்பான்மை சமுதாயத்தினரிடம் வகுப்பு உணர்வுகளைத் தூண்டுவது. 

சிறுபான்மையினரின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வர, இந்துக்களின் எண்ணிக்கையோ குறைந்து கொண்டே வருகிறது என்று சாதுர்யமாகப் பிரசாரம் செய்வதன் மூலம் பெரும்பான்மை இனத்திடையே பீதியை ஏற்படுத்துவது. 

நிர்வாக யந்திரத்தில் ஊடுருவுவது; அங்கு வகுப்புவாத நிலைப் பாடுகளை வளர்ப்பது; வகுப்புகளுக்கிடையே உள்ள பிளவுகளை விரிவுபடுத்தவும் எந்தவோர் அற்ப நிகழ்ச்சிக்கும்கூட வகுப்புவாத வண்ணத்தைக் கொடுக்கவும் பெரும்பான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுப்பது. 

'பிற்படுத்தப்பட்டோர் நலன்களின் காவலர்கள்' என மேற்சொன்ன இருவருக்கும் அங்கீகாரம் வழங்கிவந்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியோ, மதங்களையும் கடவுள்களையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு மதமாற்றத் தடைச் சட்டத்தை வரவேற்பதில் தயக்கமில்லை என 'பெரியாரின் விளக்கமொன்றைக் கொடுத்தார். கோயில்களில் ஆடு, கோழி பலியிடுவதைத் தடுக்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசாங்கம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவந்ததை யும் 'பகுத்தறிவு' அடிப்படையில் ஆதரித்தார். இச்சட்டத்தைத் தூசி தட்டி எடுப்பதற்கான பின்னணிபற்றி அவருக்குக் கவலை இல்லை. 

'பிற்படுத்தப்பட்டோர் உரிமைப் பாதுகாப்பாளர்கள் மட்டுமல்ல, இடதுசாரி இயக்கத்தின் மூலம் ஆளுமை வளர்ச்சி பெற்ற எழுத்தாளர் ஜெயகாந்தன், மதமாற்றத்தடைச் சட்டத்தின் வெகு தீவிர ஆதரவாளராக, ஓர் உண்மையான இந்து தேசியவாதியாகத் தம்மை அடையாளப் படுத்திக் கொண்டார். 

இவற்றையெல்லாம் மேற்சொன்ன தனிமனிதர்களின் நேர்மைக் குறைவாக மட்டும் காணமுடியாது. மாறாக, அவை 'இந்துத்துவம் இன்று இந்திய அரசியலிலும் பண்பாட்டிலும் மட்டுமின்றி தனிமனிதக் குணச் சித்திரங்களிலும் முதன்மை நீரோட்டமாக வளர்ந்துள்ளது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் ஆகும். இந்துத்துவம், மத உணர்வுள்ள வர்களை மட்டுமல்ல மத உணர்வற்ற, சமயச்சார்பற்ற, அரசியல் சந்தர்ப்பவாதிகளையும் பிழைப்புவாதிகளையும் பயன்படுத்தித்தான் வளர்ந்துள்ளது, வளர்ந்து வருகிறது. இந்திய அரசியலின் இன்றைய மையப்புள்ளி இந்துத்துவம்தான். இந்தக் கசப்பான, வேதனைதருகின்ற உண்மையை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 

ஆரிய - சமாஜத்தையும் கருத்தில் கொண்டால் இந்துத்துவத்திற்கு ஏறத்தாழ நூற்று முப்பதாண்டுகள் வரலாறுண்டு. இந்திய தேசியத்தில் தான் அதன் ஆணிவேர்கள் உள்ளன. இந்திய தேசியம், இந்திய தேச உருவாக்கம் ஆகியவற்றின் வரலாற்றையும் அவற்றின் அரசியல், பொருளியல், கருத்துநிலைக் (idealogy) கூறுகளையும் விளக்க முயன்றுள்ளேன். இந்திய தேசியம் என்பது அடிப்படையில் பார்ப்பன - பனியா தேசியம்தான். இத்தேசியத்திற்கு நியாய வாதங்கள் வழங்கும் பார்ப்பானியக் கருத்துநிலை இருபோக்குகளைக் கொண்டுள்ளது. ஒன்று, வெளிப்படையாகவே மூர்க்கத்தனமாகச் செயல்படும் போக்கு மற்றொன்று, எல்லாவற்றையும் நுட்பமான முறையில் உள்ளிழுத்துக் கொண்டு மேலாண்மையை நிறுவிக்கொள்ளும் போக்கு. இவ்விரு போக்குகளில் ஏதேனுமொன்றைப் பிரதிநிதித்துவம் செய்தவர்களே இந்து - இந்திய தேசியவாதிகள். 

கருத்துநிலை என்பதை கார்ல் மார்க்ஸ் கொண்டிருந்த பொருளில் பயன்படுத்துகிறேன். அதாவது கருத்துநிலை என்பது குறிப்பிட்ட பல்வேறு கருத்துகளின் கோவை அல்லது தொகுப்பு. அவை மெய்மை யைச் சிதைத்துக் காட்டுபவை. மெய்மை பற்றிய சரியான புரிதலுக்கு இடையூறாக இருப்பவை. அவற்றை மொழிபவர்களின் தற்சாய்வுகள், விருப்பு - வெறுப்புகள் ஆகியவற்றை மூடிமறைப்பவை. எல்லா மாந்தர் களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் பொதுவானவை என உரிமை பாராட்டிக் கொள்பவை. கார்ல் மார்க்ஸைப் பொறுத்தவரை அறிவியல் நோக்கு என்பது மேல் தோற்றம் என்னும் மூடுதிரையைக் கிழித்து ஊடுருவி, அத்திரையால் மூடி மறைக்கப்பட்டுள்ள வர்க்க, சாதிய நலன்களை வெளிப்படுத்துவதாகும். இந்த வரையறையின் அடிப்படை யில்தான் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்ட ஆளுமைகளையும் வாழ்க்கை நெறிகளையும் கொண்டிருந்த இந்திய தேசியவாதத் தலைவர் களை, அவர்கள் எல்லாருக்கும் பொருந்தக்கூடிய கருத்துநிலைச் சட்டகத்திற்குள் வைத்துப் பார்த்திருக்கிறேன். 

காந்தியும் நேருவும் இந்துமதத் தற்சாய்வுகளிலிருந்தும் பார்ப்பன விழுமியங்களிலிருந்தும் விடுபட முடியாதவர்களாக இருந்திருக் கிறார்கள் என்னும் அளவிலேயே அவர்களைப் பற்றிய விமர்சனங்கள் இந்த நூலில் உள்ளன. ஆனால் அவர்களும் சாவர்க்கர், ஹெட்கேவர் போன்ற இந்து மத வெறியர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று கூறப்படவில்லை. காங்கிரஸிலிருந்த வலதுசாரியும் இந்துத்துவ சார்பாளருமான வல்லபாய் பட்டேல் பற்றி, இந்த நூலிலுள்ள கருத்து களைவிடக் கடுமையான கருத்துகள் வரலாற்று அறிஞர் ஏ.ஜி. நூரானி யின் கட்டுரைகளிலும் நூல்களிலும் காணப்படுவதை வாசகர்கள் அறிவர். 

கருத்துநிலைகளின் வரலாற்றை ஆராய்ந்த பிரெஞ்சு மார்க்சிய அறிஞர் அல்பேர் கொர்னு, ஆளும் வர்க்கங்கள் கடுமையான நெருக்கடி யில் சிக்கிக்கொள்ளும் சமயங்களில் அவற்றின் கருத்து நிலைவாதிகள் அப்பட்டமான பொய்களையும் புரட்டுகளையும் திட்டமிட்டு உருவாக்கி மக்களிடையே பரப்புவதை எடுத்துக் கூறுகிறார். நாஜிகள் உருவாக்கிய கட்டுக் கதைகளையும் புனைசுருட்டுகளையும் இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறுகிறார். கடந்த 30 ஆண்டுகளாக ஏற்பட்ட தலித், பழங்குடி, பிற்பட்ட மக்களின் எழுச்சியை ஒருபுறமும் 1990 களிலிருந்து உலகமயமாக்கல் கொள்கையால் ஏற்படும் சவால்களை மற்றொரு புறமும் எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருந்த சமூகப் பிரிவுகளின் (சங்பரிவாரத்தின் மரபான சமூக அடித்தளமாக அமைந்திருந்த வணிகர்கள், மத்தியதர வர்க்கத்தினர், பார்ப்பனர், மேல்சாதி இந்துக்கள், நிலவுடைமைச் சக்திகள்) எதிர்வினையே இந்துத்துவம். 

இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்திய அரசமைப்பு ஆகியன ஜனநாயக நெறிகளின் அடிப்படையிலோ தேசியப் போராட்டத்தின் போது காந்தி - காங்கிரஸ் தந்த வாக்குறுதிகளுக்கு உகந்தவாறோ உருவாக்கப்பட்டவையல்ல என்று கருதுபவர்களில் நானுமொருவன். அவற்றின் உருவாக்கத்தின் வர்க்க - சாதிய அடிப்படையை இந்த நூலில் விரிவாக விளக்கியுமிருக்கிறேன். இருப்பினும், பூர்ஷ்வா ஜனநாயகக் குடியரசின் அம்சங்கள் சில, அரசியலமைப்புச் சட்டத்தில் தவிர்க்க இயலாதபடி இடம்பெற்றுள்ளன. ஏனெனில் வர்க்க - சாதிய அமைப் புள்ள எந்த ஒரு நாட்டிலும், அந்த அமைப்பின் நலன்கள், ஆளும் வர்க்க-சாதிய சக்திகளின் கருத்துநிலையில் பட்டவர்த்தனமாக வெளிப் படுத்தப்படுவதில்லை. அனைவரையும் தழுவும் விழுமியங்கள் என்கிற சொல்லாடலின்கீழ் அவை மூடிமறைக்கப்படுகின்றன; மறுபுறமோ , இந்த விழுமியங்களும்கூட வரலாற்றில் பல்வேறு இடங்களில், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூகக்குழுக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகக் கிடைத்த உரிமைகள்தாம். எனவே இச்சொல்லாடல் களால் குறிக்கப்படும் விழுமியங்களுக்குப் பொருள் கொள்வதும், அப்படிப் பொருள் கொண்ட வகைக்கு உகந்த பயன்களைப் பெறுவதும் வர்க்க - சாதியப் போராட்டத்தின் பகுதியாக அமைகின்றன. 

பார்ப்பன - பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக மிகப்பெரும் சவாலாக இருந்த திராவிட இயக்கம் (அதன் சிறுசிறு பிரிவுகளைத் தவிர) நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்துத்துவத்திற்கு முட்டுக்கொடுத்து நிறுத்தும் வேலையை மேற்கொண்டது தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநில மக்களுக்கும் சேர்த்து இழைக்கப்பட்ட கேடாகும். தற்காலிக அரசியல், தனிப்பட்ட நலன்களுக்காக கடந்த கால இலட்சியங்களும் தமிழக மக்களின் நிகழ்கால, எதிர்கால நலன்களும் பலியிடப்பட்டுவிட்டன. 

இந்த நூலின் மையவாதங்களுக்கு வலுச்சேர்ப்பதற்காக எனது முந்தைய கட்டுரைகளில் சில பெருமளவு திருத்தப்பட்டுச் சேர்க்கப் பட்டுள்ளன. இந்நூலுக்கு உசாத்துணையாகப் பயன்பட்டவற்றில் ஏ.ஜி. நூரானியின் நூல்களும் கட்டுரைகளும் குறிப்பிடத்தக்கவை. எனினும் காந்தி, காங்கிரஸ், இந்திய தேசியம் பற்றிய அவருடைய ஆக்கங்களில் வர்க்க - சாதியத்தன்மை குறித்த எந்த விவாதங்களும் இல்லை. காந்தி, நேரு, காங்கிரஸ் தேசியவாதத்தின் கூற்றுகளை அப்படியே எடுத்துக் கொள்கிறார்; அந்தச் சொல்லாடல்கள் தம்மளவி லேயே உண்மைகளைக் கொண்டிருப்பதாகக் கருதுகிறார். அந்தத் தேசியத்தைக் கட்டுடைக்க மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரியப் பார்வை எனக்குப் பயன்பட்டுள்ளது. 

இந்து இந்தி இந்தியா என்னும் இந்த நூலின் முதல் பதிப்பு 1993இல் மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதன்பிறகு இந்திய தேசிய உருவாக்கம், இந்து இந்திய தேசியம் ஆகியன பற்றிய எனது புரிதலில் பெரும் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை . என்றாலும், 1998இல் இந்துத்துவம் பெரும் அரசியல் சக்தியாக வளர்ச்சி பெற்று மத்திய அரசாங்க ஆட்சியைப் பிடித்த சூழலில், அது முன்னிறுத்திய சின்னங்கள், குறியீடுகள், தலைவர்கள் ஆகியோர் பற்றிய முன்னிலும் கூடுதலான தகவல்களைச் சேர்க்க வேண்டியிருந்தது. அதன் விளைவாக, புதிய உள்ளடக்கங்களுடன் ஒரு புதிய நூலாகவே இருந்து இந்தியா : அக்ரனி யிலிருந்து அத்வானி வரை என்னும் தலைப்பில் 2003 ஆம் ஆண்டு தோற்றம் கண்டது. அதில், 1993 ஆம் ஆண்டுப் பதிப்பில் வெளிவந்த அண்ணல் அம்பேத்கர் பற்றிய கட்டுரை இடம்பெறவில்லை. எனினும், அதன் பிறகு அம்பேத்கரின் சிந்தனைகள் பற்றிய பல்வேறு கட்டுரை களை எழுதியுள்ளேன். அம்பேத்கரியம் பற்றி முனைவர் ஆனந்த் டெல்டும்ப்டெ எழுதியுள்ள முக்கிய நூலொன்றையும் இரு நீண்ட கட்டுரைகளையும் தமிழாக்கம் செய்துள்ளேன். அம்பேத்கரின் சிந்தனையும் வாழ்வும் பற்றிய விரிவான நூல் எழுதும் பணியிலும் ஈடுபட்டுள்ளேன். 

1993 பதிப்பில் அம்பேத்கர் பற்றிய பகுதியின் நிறைவாகக் கூறப் பட்டுள்ள பின்வரும் கருத்துகள் என்னுள் இந்த முப்பத்தியோரு ஆண்டுகளில் இன்னும் வலுவாக வேரூன்றியுள்ளன: 

தலித் மக்களை ஒழுங்கமைத்து அவர்களுடைய விடுதலைக்காகவும், பிற உழைக்கும் (சூத்திர) மக்களுக்காகவும் ஓயாது பாடுபட்டு வந்தவரும், தமது போராட்டப் பணிகளுக்கு இடையே ஆழமான படிப்பையும் ஆய்வையும் மேற்கொண்டு ஆயிரக்கணக்கான பக்கங் களில் வளமான சிந்தனையை வழங்கியவருமான அம்பேத்கரை மேன்மேலும் ஆழமாகக் கற்பது இந்தியத் துணைக் கண்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பார்ப்பன-பனியா எதிர்ப்பு (புதிய ஜனநாயக) போராட்டத்திற்கும் சோசலிச மாற்றத்துக்கும் இன்றியமையாததாகும்.

2004 முதல் 2011 வரை, மறைமுகமான 'இந்துத்துவத்தை' கடைப்பிடித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி தூக்கியெறியப்பட்டு, பாஜக கூட்டணி மட்டுமல்லாது, பாஜக தனியாகவும் மிகப் பெரும்பான்மை இடங்களை 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த 11 ஆண்டுக் காலத்தில் இந்துத்துவச் சக்திகளின் சொல்லாடல்களில் பெரும் மாற்றம் ஏற்படவில்லை. என்றாலும், ஐரோப்பிய நாடுகளில் - குறிப்பாக பிரான்ஸ், துருக்கி, உக்ரெய்ன், ஹங்கேரி ஆகியவற்றில் - புதிய தாராளவாதக் கொள்கையை மும்முரமாக நடைமுறைப்படுத்த சுரண்டும் வர்க்கங்கள் பாசிச சக்திகளை ஊக்குவித்து வருவதைப் போலவே, இந்தியாவிலும் மிகப் பெரும் தொழில், வணிக நிறுவனங்களும் (கார்ப்பரேட்), தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களும், மத்தியதர வர்க்க அறிவாளிகளும், பெரும் வணிக ஊடகங்களும் ஒன்றிணைந்து இந்துத்துவச் சக்திகள் மீண்டும் மத்திய அரசாங்க ஆட்சியைக் கைப்பற்ற உதவியுள்ளன. 

இந்திரா காந்தி கொலையுண்டதை அடுத்து சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்களுக்குப் பிறகுதான் காங்கிரஸ் முன்னுவமை இல்லாத அளவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது (411 இடங்கள்). அதேபோல், 2002இல் குஜராத்தில் முஸ்லிம் களுக்கு எதிரான கொலை வெறித் தாக்குதல்கள், குஜராத் 'மாடலைப் பின்பற்றிக் கடந்த சில ஆண்டுகளாகவே ஒடிசா, உத்திரப் பிரதேசம், கர்நாடகா, காஷ்மீர் முதலியவற்றில் சிறுபான்மை மதத்தினர் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல்கள் ஆகியவற்றுக்குப் பிறகே பாஜக முன்னுவமை இல்லாத நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைப் பெற்றுள்ளது. 

மேற்சொன்ன இரு நூல்களும் 1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகே எழுதப்பட்டன. அந்த இரு நூல்களிலும் 1984இல் சீக்கியர்களுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்கள் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சில முக்கிய உண்மைகள் கோடிட்டுக் காட்டப்படவில்லை (இந்தப் பதிப்பில் அவை தொடர்பான கூடுதல் தகவல்கள் தரப்பட்டுள்ளன). 

அந்த உண்மைகள் பின்வருமாறு: 

1. பிற மதத்தினரின் புனிதத் தலங்கள், அவர்களுடைய ஆழமான நம்பிக்கைகளின் குறியீடுகள் ஆகியவற்றின் மீது தாக்குதலை நடத்துவதற்கு இந்தியர்களின் மனங்களிலிருந்த தடையை முதன் முதலாக அகற்றியது 1984 ஜூன் மாதத்தில் பொற்கோவில் மீது நடத்தப்பட்ட தாக்குதல்தான். அந்தத் தாக்குதலை ஆதரித்துப் பேசிவந்த சங் பரிவாரம்தான், அயோத்தியில் 'இராம ஜன்ம பூமியை மீட்பதற்கான ஒரு குழுவை அதே ஆண்டு டிசம்பரில் கூட்டியது. 

2. இந்தியாவிற்குள்ளேயே இருக்கும் அதன் உள்நாட்டு எதிரிகள் என்று சிறுபான்மைச் சமுதாயங்கள் முழுவதன் மீதும் முத்திரை குத்தி, மனிதாபிமான உதவிகளையும் பாதுகாப்பையும்கூடப் பெறத் தகுதியற்றவர்களாக அவர்களைச் சித்திரிப்பதும் 1984 ஜூன் மாதத்தில்தான் தொடங்கியது. பொற்கோவிலில் இராணுவம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் சடலங்களை அப்புறப் படுத்தவோ, காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கவோ தயாராக இருந்த செஞ்சிலுவை அமைப்பின் ஊழியர்கள் பொற்கோவில் வளாகத்திலிருந்து வெகு தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். தர்பார் சாகிப் வளாகத்தின் கிழக்குப் பகுதியிலுள்ள விடுதிகளில் (பிந்தரன்வாலவும் அவருடைய கூட்டாளிகளும் தங்கியிருந்த இடத்திலிருந்து நேர் எதிர் திசையில் இருந்தவை) தங்கியிருந்த புனிதப் பயணிகள் அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2002ஆம் ஆண்டு குஜராத்தில் பட்டப் பகலில் படுகொலை செய்யப்பட்ட, காயமடைந்த முஸ்லிம்களுக்கு மனிதாபிமான உதவி செய்ய அரசாங்க அதிகாரிகள் எவரும் முன்வரவில்லை. 

3. பெரும்பான்மை சமூகத்தினரான இந்துக்களிடமிருந்து பண் பாட்டால், மதத்தால் வேறுபட்டிருப்பவர்களின் அடையாளச் சின்னங்கள் - தலைப்பாகை போன்றவை மட்டுமின்றி, வரலாற்றுச் சின்னங்களும் ஆவணங்களும் - அரசின் நேரடி மற்றும் மறைமுக ஒத்துழைப்புடன் அழிக்கப்படுவதும் 1984 ஜூன் மாதத்தில்தான் தொடங்கின. 

தங்களுடைய சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட வன்முறைகள், அதற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் ஆகியவற்றுக்கு எதிராக சீக்கிய இளைஞர்களின் போராட்டம் வன்முறை வடிவங்களை மேற்கொண்டது. அதன் காரணமாக குற்றமற்ற இந்துக்கள் மட்டுமின்றி, சீக்கியர்கள் பலரும் கொல்லப்பட்டனர். அதற்கான அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் காரணிகளைப் பற்றி சிறிதும் அக்கறை காட்டாமல், அவற்றை வெறும் 'சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளாகப் பார்த்து, கொடிய போலீஸ் நடவடிக்கைகள் மூலம் நூற்றுக்கணக்கான 'என்கவுண்டர் சாவுகளையும் ஆயிரக்கணக்கானோர் 'காணாமல் போகச் செய்யப்பட்ட நிகழ்வுகளையும் மேற்கொண்ட மத்திய, மாநில அரசாங்கங்களின் செயல்களை இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நியாயப்படுத்தினர், அந்தப் போராட்டங்கள் சிஐஏவால் தூண்டிவிடப் பட்டவை என்று கூறினர். மிகக் கொடிய மனித உரிமை மீறல்களைச் செய்த பஞ்சாப் காவல்துறைத் தலைமை அதிகாரி கே. பி. எஸ். கில் என்பவரும் கூட இடதுசாரிகளின் நன்மதிப்பைப் பெற்றிருந்தார். 

1984, 1992, 2002 ஆம் ஆண்டு நிகழ்வுகள் சிறுபான்மை மதத் தினருக்கும் இனத்தினருக்கும் மிக வலுவாக அறிவித்த செய்தி, இந்தியாவில் ஒரே ஒரு தேசியம், இந்து தேசியம் மட்டுமே, இருக்க வேண்டும், இருக்க முடியும் என்பதுதான். பன்முகப் பண்பாட்டுடன், அனைத்து மதத்தினரையும் அனைத்து தேசிய இன மக்களையும் சமமாக, நீதியுடன் நடத்துகின்ற ஒரு தேசத்தையும் தேசியத்தையும் காண விரும்புகிறவர்களை வெறுக்கின்ற செய்தியே இது. 

இந்த நூலிலுள்ள கருத்துகளும் விளக்கங்களும் 'இந்து இந்தி இந்தியா' என்னும் தலைப்புதான் சரியானது, நியாயமானது என்பதை அறுதியிடுகின்றன. 'மோடி சர்க்கார்' அறிவித்த 'சம்ஸ்கிருதவாரமும் இதைத்தான் உறுதிப்படுத்துகிறது. 

எஸ்.வி.ராஜதுரை

தொடர்புடைய மற்ற பதிவுகள்:

இந்து இந்தி இந்தியா - பொருளடக்கம்