வால்காவிலிருந்து கங்கை வரை - இந்நூலைப் பற்றி

புத்தகத்தை இங்கே வாங்கலாம்
https://www.periyarbooks.in/volgavilirunthu-gangai-varai-2376.html


இந்நூலைப் பற்றி

“வால்காவிலிருந்து கங்கை வரை" என்ற புத்தகம் தயாரானதும், முதல் பிரதி எனக்குத்தான் கிடைத்ததென்று நினைக்கிறேன். இந்தப் புத்தகத்தை ஒரு முறையல்ல; பலமுறை படித்தேன். படித்துச் சொன்னேன். வயதாலும், அறிவாலும், தன்மையாலும் மாறு பட்ட பல திறத்தவருக்கும், படித்துச் சொல்லியிருக்கி றேன்; இக்கதைகளில் 'கதை' அம்சத்தைவிட, 'சரித்திர' அம்சமே அதிகமாயிருக்கிறதென்பது என் கருத்து. 'கதைகள்' லேசாகவும் சுலபமானதாயும் இருக்க வேண்டும்; ஆனால் இதிலுள்ள அநேகக் கதைகள், அறிவின் பாரத்தால் அழுத்தப்பட்டிருக்கின்றன. இந்தக் கருத்தை நான் ராகுல்ஜியிடம் தெரிவித்தேன். அதற்கு, "இந்தக் கதைகள் நாளையும் செயலையும் குறிக்கும் சரித்திரமாகக் கருதப்பட்டாலும் எனக்குத் திருப்தியே" என்பதுதான் அவர் பதில்.

இந்நூலை நான் மனமாரப் புகழ்ந்திருக்கிறேன்; பலர் புகழவும் கேட்டிருக்கிறேன். பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஒரு மகாராட்டிர அறிஞர், “இந்த ஹிந்திப் புத்தகத்திற்கு ஈடான புத்தகம் இந்தியப் பாஷைகள் எதிலும் இதுவரை தோன்றவில்லை" என்று ஒரு பத்திரிகையில் இந்நூலைக் குறிப்பிட்டு எழுதியிருந்த போது, தாய்மொழிப் பற்றுள்ள என் மனம் கர்வத்தால் நாட்டியமாடத் தொடங்கி விட்டது.

புகழ்ச்சி மட்டுமா? கடுமையான தாக்குதலையும், ''வால்காவிலிருந்து கங்கை வரை" பெற்றிருக்கிறது. ''விஸ்வ பந்து" என்ற பத்திரிகையின் டிசம்பர் இதழ் ஒன்றில் சுவாமிஜி என்ற புனைபெயரில் இந்நூலைத் தாக்கியுள்ள கனவான், "வேதத்தைத் தாக்கும் 'மொட்டைத்' தத்துவார்த்தி ராகுல்” என்று கூறும் அளவுக்குக் கூடப் போயிருக்கிறார். தாக்கத் துணிந்தவர்கள் புனைபெயர் வைத்துக் கொள்வதேனோ?

ஒரு புத்தகம் பிடித்திருப்பதும் பிடிக்காமலிருப்பதும், மனிதர்களின் ருசியைப் பொறுத்த விஷயம் மட்டுமல்ல, அவர்களின் திறமையைப் பொறுத்ததுங் கூட. எந்த ஒரு புத்தகமும் எல்லோருக்கும் திருப்தியைக் கொடுப்பதில்லை. இந்த விதிக்கு விலக்காக, "வால்காவிலிருந்து கங்கை வரை” மட்டும் எப்படியிருக்க முடியும்?

ராகுல்ஜியின் இந்த மகத்தான சிருஷ்டியை நான் நன்குணர்ந்திருக்கிறேன். நம் தாய் நாட்டின் மகானாகிய ஒரு சிந்தனையாளர், தமது வாழ்நாள் முழுவதும் தேடித் திரட்டிய அறிவுப் பொக்கிஷம், இந்நூலிலே அள்ளித் தரப் பெற்றிருக்கிறது. அவருடைய முடிவுகள் யாருக்கேனும் தவறாகத் தோன்றினால், அவர்கள் தர்க்க ரீதியாக, காரண - காரிய முறையில் அவைகள் தவறு என்று நிரூபிக்கட்டும்.

இந்நூலின் ஆரம்பக் கதைகளான நிஷா, திவா, அமிர்தாஸ்வன், புருகூதன் என்ற நான்கும் கி.மு. 6000த் திலிருந்து 2500 வரை உள்ள சமுதாயத்தைச் சித்தரிக்கின்றன. அது சரித்திரத்திற்கு முந்திய காலம். மேலும் அவைகள் கதைகள். ஆகவே, இவற்றில் கற்பனையும் ஊகமும்தான் அதிகமாயிருக்க முடியும். என்றாலும், இவைகளை வெறும் கற்பனை என்று அலட்சியம் செய்து விட முடியாது! ஹிந்து - ஐரோப்பிய, ஹிந்து - ஈரானிய மொழிகளையும் அவற்றின் மூலங்களையும் ராகுல்ஜி ஆராய்ந்து கற்றதின் விளைவே இந்த நான்கு கதைகளும். இந்தக் கதைகளை மறுக்க விரும்புகிறவர்கள், முதலில் பெடரிக் எஞ்சல்ஸ் (Frederic Engels) எழுதிய "குடும் பத்தின் தோற்றம்" (Origin of Family) என்ற நூலை எதிர்த்துப் பொய்யாக்க வேண்டும்.

அடுத்து வரும், புருதானன், அங்கிரா, சுதாஸ், பிரவாஹன் என்ற நான்கு கதைகளுக்கும், இலக்கிய ஆதாரமிருக்கிறது. வேதம், மகாபாரதம், பிரசித்தி பெற்ற பெளத்த கிரந்தமான அட்டகதா யாவும் இக் கதைகளுக்குப் பின் பலமாயிருக்கின்றன. சுதாஸ் என்ற கதைக்கு, ருக்வேதத்திலேயே முழுக்க முழுக்க ஆதார் மிருக்கிறது. பிரவாஹன் என்ற கதைக்கு சாந்தோக்ய உபநிஷதமும், பிருகதாரண்ய உபநிஷதமும் ஸ்திவார மாய் அமைந்திருக்கின்றன. இக்கதைகள் கி.மு. 2000த்தி லிருந்து கி.மு. 700 வரை உள்ள காலத்தின் சமுதாய வளர்ச்சியை விளக்குகின்றன.

ஒன்பதாவது கதை பந்துலமல்லன் (கி.மு. 490). இந்தக் கதைக்கு வேண்டிய உபகரணங்கள் யாவும், பௌத்த நூல்களிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் காலத்தைப் பற்றிப் பௌத்த நூல்களிலிருந்து கிடைக்கும் ஏராளமான செய்திகளை, இச் சிறுகதை யிலே புகுத்த முடியாததால், அவற்றிற்கெனத் தனியே "சிம்ஹ சேனாபதி” என்ற ஒரு முழு நாவலையே எழுதி யிருக்கிறார் ராகுல்ஜி.

பத்தாவது கதை நாகதத்தன். சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்தைப் படியுங்கள். கிரேக்கர்களின் யாத்திரை வரலாற்றைப் படியுங்கள். இன்று காலேஜ் களிலே படிப்பிக்கப்படுகின்ற 'வின்ஸன்ட் ஸ்மித்' எழு திய சரித்திரத்தைப் படியுங்கள். இவைகளிலெல்லாம் நாகதத்தனின் மூலாதாரத்தைக் காண்பீர்கள்.

பதினோராவது கதையான பிரபா, கதை அம்சத் திலும் ஈடு இணையற்று விளங்குகிறது. அஸ்வகோஷ் எழுதிய புத்த சரித்திரமும், செளந்தரியானந்தமும் இக் கதைக்கு ஆதாரங்கள். 'வின்டர் நிட்ஜ்' எழுதிய, "இந்திய இலக்கியத்தின் சரித்திரமும் அதற்குப் பின் பலமாயிருக்கிறது.

பன்னிரண்டாவது கதையான சுபர்ணயெளதே யன் குப்த காலக்கதை. அழியாத புகழ்பெற்ற ரகுவம்ஸம், சாகுந்தலம், குமாரசம்பவம் என்ற காளிதாஸனின் நூல்கள், இக்கதைக்கு ஆதாரபூர்வமாய்ச் சாட்சி சொல்லுகின்றன.

பதின்மூன்றாவது கதையான துர்முகன், உண்மை யிலேயே வீரனின் வில்லிலிருந்து விடுபட்ட கணை போல் நமது நெஞ்சிலே ஆழமாகத் தைக்கிறது. என்ன செய்யலாம்? ஹர்ஷ சரித்திரமும், காதம்பரியும், சீன யாத்ரீகனான இத்சிங்கின் யாத்திரை வரலாறும், அக் கதையை உண்மையென்று நிரூபிக்கின்றனவே!

பதினான்காவது கதையின் காலம் கி.பி. 1200. அதன் அஸ்திவாரத்தை நைடதத்திலும், அக்காலத்துச் சிலாசா சனங்களிலும் தேடிக் காணலாம்.

பாபா நுர்தீனிலிருந்து பின்னால் உள்ள 6 கதை களும் 12ம் நூற்றாண்டிலிருந்து 20ம் நூற்றாண்டுவரை உள்ள காலத்தைக் குறிக்கும். அவற்றிற்குத் தெளிவான சரித்திர ஆதாரங்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றை எதிர்ப்பவர்களும் அரியர்.

இந்தக் கதைகளின் முடிவுகளைப் பற்றி, ஆதார பூர்வமாகத் தர்க்கம் செய்வது எனது சக்திக்கு அப்பாற் பட்ட காரியம். இவற்றின் கருத்தை ஏற்கவோ, மறுக்கவோ செய்வதற்கு, ராகுல்ஜியைப் போன்ற ஞானக் கடலாய் இல்லாவிட்டாலும், அவரை அடுத்துச் செல்வதற்குரிய ஞான மாணவனாகவாவது இருக்க வேண்டும். இந்தக் கதைகளை எழுதும்போது, ராகுல்ஜியின் பேனா கற்பனையின் பலத்தால் ஓடவில்லை . பல வருடங்கள் முயன்று பெற்ற அறிவின் பலத்தால் ஓடிற்று.

அநேகப் பண்டிதர்கள் இதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ய முயலுகிறார்கள். ராகுல்ஜி வெறும் பண்டிதர் ரல்ல; மகா மேதை. அவருடைய சிருஷ்டிக்குச் "சத்தி யமே தர்மம்" என்ற மகத்தான உண்மையே அடிப் படையென்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

பதந்தானந்த கெளசல்யாயன்