Skip to product information
1 of 3

சுயமரியாதைப் பதிப்பகம்

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு

மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு

Regular price Rs. 80.00
Regular price Sale price Rs. 80.00
Sale Sold out
Shipping calculated at checkout.

இது வரலாற்று நூல் அல்ல. அதற்குரிய செய்திகளைச் சேகரிக்கும் வசதிகள் நம்மிடத்தில் இல்லை .
இது வாழ்வியல் நூலுமல்ல. அதை எழுதுவதற்குரிய 'நெடிய - கொடிய' அனுபவங்கள் நமகில்லை .
இது வழிகாட்டும் நூல். இப்படியும் சில நூல்கள் வரவேண்டுமென்று வழி காட்டும் நூல்.
இந்த நூல் நெடுகிலேயும் நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் திராவிடப் பேரியக்கதின் அடிக்கற்களாய் இருந்தவர்கள். அதற்காக தங்கள் வாழ்வை ஈகம் செய்தவர்கள். பதவி மோகம் இல்லாதவர்கள். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்காதவர்கள்.
இவர்கள் பலரோடு நான் நெருங்கிப் பழகியிருக்கிறேன். அவர்கள் குடும்ப உறுப்பினர்களோடு பழகியிருக்கிறேன். அவர்களில் ஓரிருவர் மாத்திரம் தான் இப்போது இருக்கிறார்கள். அவர்களில் சிலரோடு நான் இன்று வரை நட்போடு இருக்கிறேன். சிலர் நண்பர்களாய் இருந்து பின்னர் முரண்பட்டிருக்கிறார்கள். சிலர் என்னோடு ஆழ்ந்த கருத்து மாறுபாடு உடையவர்களாய் இருந்து இப்போது என்னை அன்போடு போற்றுகிறார்கள். இது அவர்களுடைய தவறல்ல. என்னுடைய தவறு. என்னுடைய "சேர்வார் தோஷம்” அவர்களில் பலரை என்னிடமிருந்து அன்னியப்படுத்தியது. அன்றும் இன்றும்.
மேலைநாடுகளில் இது போன்று ஒரு பெரிய இயக்கத்தின் வரலாற்றுப் பதிவேடுகளில் தங்கள் பெயர்களைப் பொறித்துக் கொள்ள வாய்ப்பற்று - காணாமல் போனவர்கள் ஏராளம். ஆனால் பின்னாளில் பெரிய நிலைக்கு வந்துவிட்ட சில தோழர்கள் தங்களுடைய எளிய - இளமைக்கால நண்பர்களை நினைவு கூர்ந்து அதனை எழுத்துக்களாய் வடித்திருக்கிறார்கள். அவர்களும் வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் திராவிட இயக்கத்தைப்போல் சமூகத்தின் பல்வேறு களங்களை கண்ட - எதிர்ப்புக்களையும் - துயரத்தையும் எருவாகவும் - நீராகவும் கொண்டு வளர்ந்த இயக்கம் வேறு எதுவும் இல்லை .
பேரறிஞர் அண்ணா ஒரு முறை பெரியாரைப் பற்றி இப்படி எழுதினார். “பெரியார் யாரைத் தூக்கி விடுகிறாரோ அவர்களாலேயே தாக்கப்பட்டவர். அவர் நினைத்திருந்தால் 'கனம்' (பெரிய மனிதர்) ஆகியிருக்க முடியும். ஆனால், இனம் மெலிந்து போயிருக்கும்.” இது திராவிட இயக்கத்திற்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்.
இந்த நூல் தந்தை பெரியார் இயக்கத்தின் பிரச்சாரத் தொண்டர்களைப் பற்றியது மாத்திரமே. இவர்களில் ஏராளமான பேர் விடுபட்டிருக்கிறார்கள். முடிந்தால் அவர்களைப் பற்றி இன்னொரு நூல் கொண்டு வருவோம். அல்லது இந்த நூலின் மறுபதிப்பில் அவைகளைக் கொண்டு வருவோம்.
பொதுத் தொண்டர்கள் என்பவர்கள் வழக்கமாக எதிரிகளினுடைய தாக்குதலுக்கும் - முதுகு குத்தலுக்கும் ஆட்பட்டே முடிந்து போவது வழக்கம். திராவிட இயக்கத்தின் பிரச்சாரகர்களையும் - முன்னணித் தொண்டர்களையும் அடக்கிப்போட்டவர்கள் - முடக்கிப்போட்டவர்கள் - அடித்துப்போட்டவர்கள் என்ற பெருமையைக் கூட நம்முடைய எதிரிகளுக்கு தராத பேருள்ளம் படைத்தவர்கள் திராவிட இயக்கத்தில் வாழ்ந்த விடுமுறை நாள் நாத்திகர்களும்' "ஓய்வூதியப் போர் வீரர்”களும் தான். முடிந்தால் - நண்பர்கள் விரும்பினால் அவர்களைப் பற்றியும் நூலொன்று கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. பார்ப்போம்.
புராணத்திலும் - வரலாற்றிலும் - தமிழிசையிலும் - கர்நாடக இசையிலும் மறக்க முடியாதவர்கள் 'மூவர்.' இந்த நூலுக்கு காரணமானவர்களும் பொள்ளாச்சி இரா.மனோகரன், ந.பிரகாசு, உடுமலைப்பேட்டை கா.கருமலையப்பன் ஆகிய ‘மூவர்' தான். அவர்களுக்கு என்னுடைய நன்றி.
தோழமையுடன்....
செல்வேந்திரன்

View full details